கேப்டன் ஸ்மித் பொறுப்பான ஆட்டம் மும்பை இந்தியன்சை வீழ்த்தியது ராயல்ஸ்

ஜெய்பூர்: மும்பை இந்தியன்ஸ் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற  ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசியது. அந்த அணியின் கேப்டனாக அஜிங்க்யா ரகானேவுக்கு பதிலாக ஸ்டீவன் ஸ்மித் பொறுப்பேற்றார். ஜோஸ் பட்லர், ஈஷ் சோதி, ராகுல் திரிபாதி ஆகியோருக்கு பதிலாக ஸ்மித்,  ஸ்டோக்ஸ், பராக் இடம் பெற்றனர். மும்பை அணியில் ஜெயந்த் யாதவுக்கு பதிலாக மயாங்க் மார்கண்டே சேர்க்கப்பட்டார். மும்பை தொடக்க வீரர்களாக டி காக், கேப்டன் ரோகித் களமிறங்கினர். ரோகித் 5 ரன் மட்டுமே எடுத்து  கோபால் வீசிய 3வது ஓவரின் 3வது பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து டி காக்குடன் சூரியகுமார் யாதவ் இணைந்தார். அதே ஓவரின் கடைசி பந்தில் டி காக் கொடுத்த கேட்ச் வாய்ப்பை எல்லைக்  கோட்டருகே ஆர்ச்சர் கோட்டைவிட்டார்.

டி காக் அரைசதம்: லைப் கிடைத்த மகிழ்ச்சியில் டி காக் அடுத்த ஓவரில் தொடர்ச்சியாக ஹாட்ரிக் பவுண்டரி, ஒரு சிக்சர் உட்பட 19 ரன் விளாசி துவம்சம் செய்தார். டி காக் - சூரியகுமார் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 97 ரன்  சேர்த்தது. சூரியகுமார் 34 ரன் (33 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்), டி காக் 65 ரன் (47 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி அடுத்தடுத்து ஆட்டமிழக்க, மும்பை ஸ்கோர் வேகம் தடைபட்டது.  ஹர்திக் பாண்டியா அதிரடியாக 23 ரன்  (15 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து வெளியேற, போலார்டு 10 ரன்னில் பெவிலியன் திரும்பினார். மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 161 ரன் குவித்தது. பென் கட்டிங் 13, குருணல் பாண்டியா  2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராஜஸ்தான் பந்துவீச்சில் கோபால் 2, பின்னி, ஆர்ச்சர், உனத்காட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 162 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல்ஸ்  களமிறங்கியது. ரகானே, சாம்சன் இருவரும் துரத்தலை தொடங்கினர். ரகானே 12 பந்தில் 12 ரன் எடுத்து ராகுல் சாஹர் பந்துவீச்சில் சூரியகுமாரிடம் பிடிபட்டார்.

அடுத்து சாம்சனுடன் கேப்டன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். சாம்சன் 35 ரன் (19 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்ப, அடுத்து வந்த பென் ஸ்டோக்ஸ் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். ராயல்ஸ் 8 ஓவரில் 77  ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திடீர் சரிவை சந்தித்தது. எனினும், ஸ்மித்துடன் இணைந்த 17 வயது இளம் வீரர் ரியான் பராக் அதிரடியில் இறங்க, ராஜஸ்தான் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இருவரும் 4வது விக்கெட்டுக்கு 70  ரன் சேர்த்தனர். ஸ்மித் அரை சதம் அடிக்க, பராக் 43 ரன் (29 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானார். ராயல்ஸ் 19.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது.  ஸ்மித் 59 ரன் (48 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்), பின்னி 7 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை பந்துவீச்சில் ராகுல் சாஹர் 3, பூம்ரா 1 விக்கெட் வீழ்த்தினர். ராஜஸ்தான் அணி 2 புள்ளிகளை தட்டிச் சென்றது. ஸ்மித்  ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: