அலட்சியம் காட்டும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உயிர்களை பலி வாங்கும் அபாயகர தொழிற்சாலைகள்

திருப்பூர்: திருப்பூரில் அபாயகர தொழிற்சாலைகளில் உயிர்ப்பலி தொடர்கிறது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அலட்சியம் காட்டுகிறது. தமிழகத்தில் தொழில்வளம் நிறைந்த நகரமாக திருப்பூர் விளங்கி வருகிறது. இந்தியா முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குகிறது. இங்கு, பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களுடன் பஞ்சாலைகள், கொப்பரை களங்கள், சாய ஆலைகள், கட்டுமான நிறுவனங்கள், மின்கோபுரங்கள் அமைக்கும் பணிகள், காற்றாலை அமைக்கும் பணிகள், கறிக்கோழி பண்ணை, அரிசி அரவை ஆலைகள், ஹோட்டல், தங்கும் விடுதி என பல நிறுவனங்கள் இயங்குகின்றன. இவற்றில், தமிழகம் மட்டுமின்றி, வடமாநில தொழிலாளர்கள் அதிகளவில் பணிபுரிகின்றனர். இவர்களில் 4 லட்சம் வடமாநில தொழிலாளர்களும் அடங்குவர்.  இந்நிறுவனங்களில், தற்போது உள்ளாட்சி அமைப்புகள் சுகாதாரப்பணிகள் செய்ய தனியார் நிறுவனங்களை அனுமதித்துள்ளது. இதற்காக, அரசு அலுவலங்கள், திருப்பூர் மாநகராட்சியில் மட்டும் 1,500-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ளனர்.   சாய சலவை பட்டறைகள், பிளீச்சிங், பிரிண்டிங், ஸ்டீம் காலரிங், இரும்பு உருக்கு ஆலைகள், கெமிக்கல் நிறுவனங்கள் உட்பட அபாயகரமான தொழிற்சாலைகளில் வடமாநில தொழிலாளர்களையே அதிகளவில் வேலைக்கு வைத்துள்ளனர்.. கழிவுநீர் தொட்டி, சாயக்கழிவுநீர் தொட்டி உள்பட விஷவாயு உற்பத்தியாகும் தொட்டிகளை சுத்தம் செய்யும் தொழிலில் இவர்கள் அதிகளவில் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை. கடந்த 2013-ம் ஆண்டு, மலம் மற்றும் கழிவுகளை இயந்திரம் கொண்டுதான் அகற்றப்பட வேண்டும் என்ற சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை பெரும்பாலான தொழிற்சாலைகள் பின்பற்றுவதில்லை. திருப்பூர் கருப்பகவுண்டன்பாளையத்தில் உள்ள தனியார்  சாயசலவை பட்டறையின் கழிவுநீர் தேக்க தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 4 பேர் கடந்த 14ம்தேதி (ஞாயிறு) விஷவாயு தாக்கி இறந்தனர்.

உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணிகள், காற்றாலை அமைக்கும் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கும் போதிய பாதுகாப்பு இல்லை. இவர்கள், கீேழ தவறி விழுந்து உயிரிழப்பது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. ஹோட்டல், தங்கும் விடுதி, சாய சலவை பட்டறை, பிரிண்டிங், பிளீச்சிங், ரசாயன உற்பத்தி ஆகிய நிறுவனங்களிலிருந்து வெளிேயறும் கழிவு  நீரை பெரிய தொட்டிகளில் தேக்கி வைத்து இரவு நேரங்களில்  சாக்கடை கால்வாய் மற்றும் நீர்வழி ஓடைகளில் திறந்து விடப்படுகிறது. இந்த அத்துமீறலை, இங்குள்ள நிறுவனங்கள் வழக்கமாக கொண்டுள்ளன. பெரும்பாலான நிறுவனங்கள் நீர் வழி ஓடைகளின் அருகில் இருப்பதால் கழிவுநீரை மிக எளிதாக நீர்வழி ஓடைகளில் திறந்து விடுகின்றன. இதனால், திருப்பூர் மாநகர் பகுதியில் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயம் பட்டுப்போனது. இதுகுறித்து கண்காணிக்க வேண்டிய மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் டேபிள் ஒர்க் மட்டுமே பார்த்து வருகின்றனர். கடந்த ஆறு மாதங்களாக சாய கழிவு நீரை வெளியேற்றும்  சாய ஆலைகளின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொழிலாளர் பணி பாதுகாப்பு விஷயத்திலும் அலட்சியம் தொடர்கிறது. அரசியல் தலையீடுகள் அதிகளவு இருப்பதால், அதிகாரிகள் ஆய்வு பணிகளுக்கு செல்வதை தவிர்க்கின்றனர். இதனால், திருப்பூர் நிறுவனங்களில் உயிர்ப்பலி தொடர்கிறது.

இதுகுறித்து மக்கள் விழிப்புணர்வு இயக்க செயலாளர் தமிழ்மணி கூறியதாவது: அபாயகரமான தொழில் நிறுவனங்களில் பெரும்பாலும் வடமாநில தொழிலாளர்களையே  குறைந்த சம்பளத்தில் வேலைக்கு வைத்துள்ளனர். இவர்களுக்கு இ.எஸ்.ஐ., இன்சூரன்ஸ், வருங்கால வைப்பு நிதி என எவ்வித அடிப்படை உரிமையும் இல்லை. பின்னலாடை நிறுவனங்கள், பஞ்சாலைகள், ரசாயனங்களை பயன்படுத்தும் நிறுவனங்கள், கல் குவாரிகள், அரிசி, எண்ணெய், அரவை ஆலைகள் உள்பட மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை. பெரும்பாலான தொழில் நிறுவனங்கள், தொழிலாளர் நலச்சட்டங்களை பின்பற்றுவதில்லை. இதுகுறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டிய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், தொழில் நிறுவனங்களுக்கு சாதகமாகவே செயல்படுகின்றனர். இதனால், உயிர்ப்பலி அதிகளவு நடக்கிறது. மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேர்மையுடன் கடமை தவறாமல் பணிபுரிந்தால் மட்டுமே உயிர்ப்பலியை தடுக்க முடியும். இவ்வாறு தமிழ்மணி கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: