தீமை புதைத்து புதிய சிந்தனையோடு எழுவோம்: இன்று ஈஸ்டர் பண்டிகை

கிறிஸ்தவர்கள் உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமானது ஈஸ்டர். இயேசு கிறிஸ்து மரித்து உயிர்த்தெழுந்ததையே ஈஸ்டர் என கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர். இயேசு கிறிஸ்து சாதாரண மனிதராக வாழ்ந்தாலும் அவர் மக்களுக்கு பல போதனைகளை செய்தவர். மனிதநேயத்தை கற்பித்தவர். பனிரெண்டு சீடர்களுடன் இயேசு தன் போதனைகளை பரப்பியதால் மக்கள் அவரை பின்தொடர்ந்தனர். இதனால் ஆட்சிக்கு பிரச்னை ஏற்படும் சூழ்நிலை உருவானதால், அப்போது இஸ்ரேலை ஆட்சி செய்த ரோமப்பேரரசு, இயேசு மீது குற்றம் சாட்டி அவரை சிலுவையில் அறைய முடிவு செய்தது. இயேசு கிறிஸ்து இறைமகன் என்பதை ஏற்க மறுத்து அவரை சிலுவையில் அறைந்து கொல்ல முடிவு செய்தனர்.

மரித்தார்... எழுந்தார்...: அதன்படி திருச்சட்டத்திற்கும், எருசலேம் ஆலயத்திற்கும் எதிராக இயேசு செயல்பட்டதாக  இஸ்ரேல் தலைவர்களில் சிலரால் குற்றம் சுமத்தப்பட்டார். குறிப்பாக, அவர் தம்மை  இறைமகன் என்று அறிவித்ததால், கடவுள் கோட்பாட்டிற்கு எதிராக  செயல்படுவதாகவும் குற்றம் சுமத்தினர். இதன்பொருட்டு இயேசுவை சாவுக்கு  தீர்ப்பிடுமாறு பிளாத்துவிடம் கையளித்தனர். இதையடுத்து இயேசுவை சிலுவையை சுமக்க வைத்து ஊர்வலமாக அழைத்துச்சென்று சிலுவையில் அறைந்தனர். இயேசு மரித்து மூன்றாம் நாளில் மீண்டும் உயிர்த்தெழுந்தார்.
Advertising
Advertising

மனிதன் தெய்வமாகலாம் : இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை முதலில் திருத்தூதர்கள் மூலம்  அவரைப்பற்றி அறிந்த பெண்கள் அறிவித்தனர். அதன்பிறகு பேதுருவுக்கும்,  பன்னிரெண்டு சீடர்களுக்கும் இயேசு காட்சியளித்தார். பிறகு 500க்கும்  மேற்பட்ட சகோதர, சகோதரிகளுக்கும் காட்சியளித்தார். ‘மனிதனாக  பிறந்து, வாழ்கின்ற முறைப்படி ஒருவன் வாழ்ந்து சிறந்தால் அவன் உயிர்ப்பான்’  என்பது வாழ்வின் மறைபொருள். எனவே இயேசு கிறிஸ்து உயிர்த்தது உண்மையே  என்பதில் எந்த ஐயமும் இல்லை.

தீமையை விலக்குவோம்: இறைவின் உருவிலும், சாயலிலும் படைக்கப்பட்டதன் அடிப்படையில் இயேசுவிடம் மனிதனின் மாண்பு அடங்கியுள்ளது. ஆவிக்குரியதும், அழியாததுமான ஆன்மா, அறிவுத்திறன், விருப்புரிமை ஆகியவற்றை பெற்றுள்ள மனிதர் கடவுளுக்காக படைக்கப்பட்டுள்ளார். ஆன்மாவோடும், உடலோடும் முடிவில்லா பேறு பெற்ற நிலைக்கு அழைக்கப்பட்டுள்ளார். நாமும் கிறிஸ்துவின் அருளால் பேறு பெற்ற நிலையை அடைகிறோம். மனசாட்சியின் படி தீமையை விலக்குதல் மனிதனுக்கு மேன்மை தரும்.பாவத்திலிருந்து மீட்சி: ஆண்டவரின் (இயேசு) பிறப்பை முன் அறிவித்தபோதே, வானதூதர் குறிப்பிட்ட ‘இயேசு’ எனும் பெயருக்கு ‘கடவுள் மீட்சிக்கிறார்’ என்பது பொருள். தம் மக்களை அவர்களுடைய பாவத்திலிருந்து மீட்சிக்கிறார் என்பதே அதன் அர்த்தம். வாழும் கடவுளின் மகனான இயேசு கிறிஸ்து, இறந்து உயிர்த்தெழுந்தார் என்பதை பறைசாற்றுவதே நற்செய்தியாகும். கடவுள் இந்த உலகத்தில் அனைத்து உயிரினங்களையும் படைத்து, மனிதனை மட்டும் தனது (கடவுள்) சாயலில் படைத்தார்.

மனித படைப்பு ஏன்: மனிதன் இந்த உலகத்தில் பல்கி பெருகி, இந்த உலகத்தை ஆட்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலேயே கடவுள் மனிதனை படைத்தார் என வேதம் சொல்கிறது. உலகில் மனிதன் பல்கி பெருகுவதை விட, மனிதரிடத்தில் பாவங்கள் பெருகுவதை கடவுள் கண்டார். பாவங்களிலிருந்து மனிதனை மீட்கவே கடவுள் (இயேசு) மனிதனாக அவதரித்தார் என்பது வரலாறு. விவிலியத்தில் ஆண்டவர் எனும் பெயர் கடவுளின் இறையாண்மையை குறிக்கும். இயேசு இந்த சிறப்பு பெயரை தம்மை குறிக்க பயன்படுத்துகிறார். தமது தெய்வீக இறையாண்மையை இயற்கை, அலகை (சாத்தான்), பாவம், சாவு ஆகியவற்றின் மீது கொண்ட ஆற்றலில் வெளிப்படுத்தினார். எல்லாவற்றுக்கும் மேலாக தனது சொந்த உயிர்ப்பின் மூலம் இறையாண்மையை மீண்டும் வெளிப்படுத்தினார்.

ஒரே பொருளானவர்...: மனித குலத்திற்கு மீட்பை கொண்டு வர இறைவன், உடல் எடுத்து உண்மையிலேயே மனிதர் ஆனார். இயேசு கிறிஸ்து பிரிக்க முடியாத வகையில் உண்மையான மனிதராகவும், உண்மையான கடவுளாகவும் இருக்கிறார். இயேசு பிறந்தவரோ, உண்டாக்கப்பட்டவரோ அல்ல. இறைவனோடு ஒரே பொருளானவர். நமக்கு மீட்பை கொணர மனித உடல் எடுத்து மனிதராகவே வாழ்ந்தார். அனைத்து விதத்திலும் (பாவம் தவிர) நம்மோடு ஒத்திருந்தார். மனித வாழ்க்கையின் அம்சங்களான அன்பு, பண்பு, பசி, தூக்கம் உள்பட அனைத்து குணங்களையும் பெற்றிருந்தார். ஆனால் இறப்பிற்கு பின்பு தனது உயிர்ப்பின் மூலம் இறைவனோடு ஒத்திருந்ததையும் வெளிப்படுத்தினார். கைவிட்டது ஏன்...: இயேசு தனது வாழ்நாளில் பல போதனைகளை செய்தார். அத்துடன் பல கஷ்டங்களையும், துண்பங்களையும் அனுபவித்தார். கல்வாரி மலையில் சிலுவையில் உயிரை விடும்போது கூட, கடைசியில் (ஏலி...ஏலி... லாமா சபக்தானி) ‘‘இறைவா... ஏன் என்னை கைவிட்டீர்’’ என இறைவனிடம் வேண்டும் வரை மனிதராகவே வாழ்ந்தார். இறப்பிற்கு பிறகு தனது உயிர்ப்பின் மூலமே தன்னை இறைவனோடு ஒப்பானவர் என வெளிப்படுத்தினார். உள்ளார்ந்த ஏக்கம்...: இயேசுவின் பாடுகள், இறப்பு, உயிர்ப்பு, மாட்சியடைதல் ஆகியவற்றை பாஸ்கா மறைபொருள் தன்னுள் கொண்டுள்ளது. இது கிறிஸ்தவ நம்பிக்கையின் மையமாகும். இறைவனது மீட்பு திட்டம் அவரது மகன் இயேசு கிறிஸ்துவின் மீட்புக்கும், மீட்பளிக்கும் சிறப்பினால் ஒரே ஒருமுறையில் எக்காலத்திற்கும் நிறைவேற்றப்பட்டது.  

கடவுள் நம்மை தம்மிடம்  ஈர்த்துக்கொள்வதற்காக நம் இதயத்தில் உள்ளார்ந்த ஏக்கத்தை வைத்துள்ளார்.  இந்த ஏக்கம் நிறைவேற நற்செய்தி பேறுகள் உறுதுணையாகின்றன. கடவுள் ஒருவரால்  மட்டுமே இந்த ஏக்கத்தை நிறைவு செய்ய முடியும்.

பாவம் கூட வலு குறையும்...: இறைவனை நேரடியாக  காண்பதே பேரின்பம். இந்நிலையில் இறைத்தன்மையிலும் கிறிஸ்துவின்  மாட்சியிலும், இறைவன் வாழ்வின் மகிழ்ச்சியிலும் முழுமையாக பங்கேற்போம்.  பிறப்பு நிலை பாவத்தில் நமது சுதந்திரம் வலு குறைந்தது. நாம் தொடர்ந்து  செய்யும் பாவங்களால் வலுக்குறைவு மிகுதியாக்கப்பட்டுள்ளது. இருப்பினும்  கிறிஸ்து நமக்கு உரிமை வாழ்வை அளித்துள்ளார். பாவத்தில் நாம்  வாழ்ந்திருந்தும் கடவுள் நம்மை அழைக்கிறார். கடவுள் தரும் நல்வாழ்வை நாம்  ஏற்க தயங்குகிறோம். இயேசுவின் உயிர்ப்பிலும், மீட்பிலும் நாம்  நம்பிக்கை கொண்டால் நம் வாழ்விலும் நல்லது நடக்கும். இயேசுவின் உயிர்ப்பு மூலம் மனித  குலத்திற்கு அறிவிப்பது என்னவென்றால் நாமும் தீமைகளை புதைத்து, புதிய  சிந்தனைகளோடு வாழ்வை தொடருவோம் என்பதே. சாத்தான் மூலம் ஏற்பட்ட கடும்  சோதனைகளையும் வென்று இயேசு கிறிஸ்து இறைநிலையை அடைந்தார். நமக்கு ஏற்படும்  சோதனைகளையும் நாம் நம்பிக்கையோடு வென்று வாழ்க்கையில் வெற்றியடைவோம். இதையே ஈஸ்டர் செய்தியாக நாம் அறிவோம்.

தாய், தந்தையரை மதிக்க வேண்டும்

விண்ணிலும், மண்ணிலும், மண்ணுக்குள்ளும், நீரிலும் சிலைகளை உருவாக்கி அவற்றை வணங்குவதையோ, அவற்றுக்கு சேவை செய்வதையோ கடவுள் விரும்பவில்லை. கடவுளின் பெயரை வீணாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். எதற்கெடுத்தாலும் கடவுளை அழைப்பது சரியானது அல்ல. ஓய்வு நாளை புனிதமாக கடைப்பிடிக்க வேண்டும். தாய், தந்தையை மதிக்க வேண்டும். நமக்காக எதையும் செய்ய தயாராக இருப்பவர்கள் தாய் தந்தை மட்டுமே. அவர்களை மதிக்காமல் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது. படைப்பும், அழிப்பும் கடவுளின் செயல். அதை மனிதன் தன் வசம் எடுப்பது கூடாத செயல். இதுபோன்ற நல்ல செயல்களை மனிதன் கடைபிடிப்பது அவசியம். இவையே இறைவனுக்கு உகந்த செயல்களாகும்.பிற மனிதனையும் நேசிக்க வேண்டும் ஒரே கடவுளைத்தவிர வேறில்லை. அவரை நேசிக்க வேண்டும். இது கிறிஸ்தவ வாழ்வின் முக்கிய அம்சமாகும். மற்றொன்று, மனிதன் ஒவ்வொருவருக்கும் நமக்கு உள்ள உணர்வுகளே இருக்கும். நம்மைப்போல் அவரை மதிக்க வேண்டும். தன்னைப்போல் பிற மனிதனையும் நேசிக்க வேண்டும். இவை இரண்டும் வாழ்க்கையின் முக்கிய அம்சங்களாகும். இவற்றையே மனிதன் பின்பற்றி நடக்க வேண்டும்.

ஆண்டவரின்ஆலய பிரவேசம்

எருசலேமில் சாலமன் கட்டிய பேராலயம் உள்ளது. இயேசு கிறிஸ்து வாழ்ந்த காலத்தில் இந்த ஆலயத்தில் குறிப்பிட்ட ஒரு பிரிவினர் நுழைய முடியாத நிலை இருந்துள்ளது. சமத்துவத்தை பரப்பி வந்த இயேசு கிறிஸ்துவுக்கு இதை ஏற்க மனமில்லை. அனைவரையும் ஆலயத்திற்குள் பிரவேசிக்க திட்டமிட்டார். இதையடுத்து ஏராளமான மக்களை திரட்டினார். ஆயிரக்கணக்கான மக்களை திரட்டி பேரணியாக சென்று ஆலயத்திற்குள் நுழைந்தார். அப்போது ஆலய பிரவேசத்தை யாராவது தடுக்க முற்பட்டால், பாதுகாப்பிற்காக ஒலிவ மர குச்சிகளை ஒவ்வொருவரும் கையில் ஏந்தி வந்தனர். இதை நினைவு கூறும் வகையிலேயே தற்போதும் கிறிஸ்தவ ஆலயங்களில் ஆண்டுக்கு ஒரு முறை குருத்தோலை பவனி கடைப்பிடிக்கப்படுகிறது.

உணவை பகிர்ந்து உண்பதே சிறப்பு

ஒருமுறை இயேசு கிறிஸ்து மக்களிடையே பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். அவருடைய பிரசங்கத்தை கேட்க ஆயிரக்கணக்கானோர் கூடினர். பிரசங்கம் முடிய நேரமானதால் அனைவருக்கும் பசி எடுத்தது. பிரசங்கத்திற்கு வந்தவர்களில் சிலர் உணவு கொண்டு வந்திருந்தனர். சிலர் உணவு இல்லாமல் வந்திருந்தனர். சிலர் உணவு சாப்பிட்டும், சிலர் பசியோடு செல்லும் நிலை இருந்தது. இதையறிந்த இயேசு மக்களிடம் கூறினார். உணவு கொண்டு வந்தவர்கள் அனைத்தையும் ஒரு இடத்தில் குவியுங்கள். அனைவரும் பந்தியில் அமருங்கள் என இயேசு கூறினார். அனைவரும் பந்தியில் அமர்ந்து சாப்பிட்டனர். அனைவரும் சாப்பிட்ட பிறகு உணவு மீதமிருந்தது. இதை பனிரெண்டு கூடைகளில் எடுத்துச்சென்றதாக வேதத்தில் கூறப்பட்டுள்ளது.

தவக்காலத்தில் 40 நாள்விரதமிருப்பது ஏன்?

இயேசு கிறிஸ்துவை சோதிப்பதற்காக சாத்தான் அவரிடம் பல இன்பத்தையும், சந்தோசத்தையும் தருவதாக உறுதியளித்தான். ஆனால் சாத்தான் கொடுத்த ஆசா பாசத்தையெல்லாம் துறக்க 40 நாட்கள் உண்ணா நோன்பிருந்து சாத்தானை இயேசு வெற்றி கொண்டார். இதையே கிறிஸ்தவர்கள் 40 நாட்களை தவக்காலமாக அனுஷ்டிக்கின்றனர். இந்த 40 நாட்களில் கிறிஸ்தவர்களும் எந்த சுப காரியங்களையும் செய்வதில்லை. புலால் உள்ளிட்ட அசைவ உணவுகளையும் தவிர்க்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: