×

மண்ணெண்ணெய் கேனால் ராஜமரியாதை கொடுக்கும் வேலூர் மாவட்ட போலீசார்

வேலூர் மாவட்டம், நாயக்கனேரி கிராமத்தை சேர்ந்த இளம்பெண், ஆடு மேய்க்கும்  தகராறில் அப்பகுதி  வாலிபரால் கடந்த மாதம் தாக்கப்பட்டார். இது பற்றி புகார் கொடுக்க பாகாயம் போலீஸ் நிலையம் சென்றபோது வேலூர் ஓட்டேரியை சேர்ந்த இளைஞர், பெண்ணை தாக்கியவருக்கு ஆதரவாக கட்டப்பஞ்சாயத்தில் செய்து தகாத வார்த்தைகளால் பேசிவிட்டாராம்.இதனால் மனமுடைந்த இளம்பெண், கழிவறைக்கு சென்று  தான் வைத்திருந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றிக் கொண்டா்ராம். உஷாரான பெண் போலீசார் அவரை மீட்டனர். மண்ணெண்ணெயினால், அந்த பெண்ணுக்கு கொப்புளங்கள் ஏற்பட்டு,  உடல் முழுவதும் தோல் உரிந்துவிட்டது. பதறிப்போன போலீசார் அவரை விரட்டி விட்டனர். வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்த அவரை,  தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும்படி விரட்டியுள்ளனர். தற்போது, இளம்பெண் குணமடைந்தாலும் காயத்தினால் ஏற்பட்ட வடுக்களும், போலீசார் மனதில் ஏற்பட்டுள்ள பீதியும் அழியவில்லை. தற்போது, வேலூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் குற்றவாளிகளை விசாரணைக்காக அழைத்து வந்தாலும், யாராவது புகார் கொடுக்க வந்தாலும் போலீசார் ராஜ மரியாதை கொடுக்கிறார்களாம். அந்தளவிற்கு மாவட்ட போலீஸ் நிர்வாகத்தில் இருந்து போலீஸ் நிலையங்களுக்கு போனில் டோஸ் விழுந்துள்ளது. சிஎஸ்ஆர் நகல் கூட கொடுக்க தயங்கும் போலீசார், இம்புட்டு பம்முகிறார்களே என்பதுதான் வேலூர் மாவட்டத்தில் தற்போதைய பரபரப்பான பேச்சு.

காசு.. பணம்... துட்டு...!
கோவை காந்திரபுரம் பகுதிகளில் ஏராளமான ‘தினசரி பார்சல்’ நிறுவனங்களில் நள்ளிரவு வரை பார்சல்கள் ஏற்றப்படுகிறது. டிராபிக் ஜாம்... என்ற ஒரே ஒரு ஆயுதத்தை பயன்படுத்தும் சென்ட்ரல் சப்-டிவிஷன் போலீஸ் அதிகாரிகள், நள்ளிரவில் இங்கு ஆப்சென்ட் ஆகாமல் ஆஜராகி விடுவார்கள். காரணம், பணம். கிருஷ்ணர், இருள் என்ற  பெயர்களை கொண்ட அதிகாரிகள் இடையேதான் வசூலில் கடும் போட்டி. ஒரு பார்சல் நிறுவனத்தையும்் விடாமல், கறாராக வசூலித்து விடுகின்றனர். ஏ.சி., டி.சி., என மேலதிகாரிகளுக்கு கொடுக்கவேண்டும் எனக்கூறி பெரும்தொகையை ஏப்பம் விடுகின்றனர். மாதந்தோறும் பல ஆயிரம் சுருட்டும் இவர்கள், இப்பகுதியில் தனிக்காட்டு ராஜாவாக உள்ளனர். இதில், ஹைலைட் என்னவென்றால், டிராபிக், சட்டம்-ஒழுங்கு ஆகியவற்றைவிட குற்றப்பிரிவுதான் டாப் என்கிறார்கள்.

நாங்கெல்லாம் கொஞ்ச நாளைக்கு; உங்க இன்ஸ்பெக்டரு வந்துருவாரு
தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக காவல்துறையில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றியவர்கள், சொந்த மாவட்டங்களில் பணியாற்றியவர்கள் என பலரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். குமரி மாவட்டத்தில் மட்டும் 20க்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு புதியவர்கள் வந்துள்ளனர். இதே போல் பல காவல் நிலையங்களில் சப் இன்ஸ்பெக்டர்களும் புதிய முகங்கள்தான். இவ்வாறு புதிதாக வந்தவர்கள், தேர்தல் பணிகளை மட்டும் தான் கவனிக்கிறார்கள். சட்டம் ஒழுங்கு பிரச்னை, திருட்டு உள்ளிட்ட சம்பவங்களில் விசாரணை நடத்துவதில்லை. அடி - தடி, நில தகராறு, பெண்கள் பிரச்னை என காவல் நிலையங்களுக்கு வருகிறவர்களிடம் புகார் மனுவை கூட வாங்கி விசாரிப்பது இல்லை. அதையும் மீறி யாராவது இன்ஸ்பெக்டர் அறைக்குள் சென்று பேச முயன்றால், உங்கள் இன்ஸ்பெக்டரு கொஞ்ச நாள்ல வந்துருவாரு. நாங்கள் இன்னும் 2 மாதம் தான். அதன் பின்னர் அவுரு வந்து உங்கள் பிரச்னைக்கு தீர்வு காண்பாரு என்று சொல்லி அனுப்பி விடுகிறார்களாம். இதனால் புகார் கொடுக்க வந்தவங்க, ஸ்டேஷனுக்கு புது இன்ஸ்பெக்டர், பழைய இன்ஸ்பெக்டர் என்று யாரும் கிடையாது. இவுங்க தான் புதுசா கதை சொல்றாங்க என கூறி நொந்து போய் செல்கிறார்களாம். தேர்தல் பணிக்கு என்று மாறி வந்தால் பொதுமக்கள் புகார் மனுவை கூடவா விசாரிக்க கூடாது என்று புலம்பியவாறு செல்கிறார்களாம்.

‘மீன் வியாபாரி’ மீது விசுவாசம் பொழிந்த நெல்லை போலீஸ்
பாளையங்கோட்டை அருகே இறந்தவரின் உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்வதில் இரு பிரிவினர் இடையே திடீர் மோதல், கல்வீச்சு நடந்தது. அங்கு பாதுகாப்பிற்கு சென்ற போலீசார் தடியடி நடத்தியே கூட்டத்தை கலைத்தனர். மோதலில் ஈடுபட்டவர்களை போலீசார் பிடித்து வாகனங்களில் ஏற்றிய போது ஒருவரை மட்டும் போலீசார் பிடிக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இதனை கண்ட கோடீஸ்வர உதவி போலீஸ் கமிஷனர், சம்பந்தப்பட்டவரை பிடித்து வாகனத்தில் ஏற்ற முயற்சித்தார். போலீஸ் அதிகாரி ஒருவரை பிடித்த போதிலும் அருகில் இருந்த உள்ளூர் போலீசார் அதை கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்த்தனர். ஆயுதப்படை போலீசார் மட்டுமே அவரை பிடித்து வாகனத்தில் ஏற்றினர். இதனால் அந்த உதவி கமிஷனர் வருத்தப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தை ரகசியமாக போலீசார் விசாரித்த போது தான், வேடிக்கை பார்த்த போலீசாரின் குட்டு வெளிப்பட்டது. அதாவது உள்ளூர் போலீசாரில் பாதி பேர் மீன் வியாபாரியான அவரிடம் வாரத்தில் இரண்டு நாட்கள் மீன்களை வாங்கி சென்றதால் அவருக்கு விசுவாசத்தை காட்டியது தெரியவந்தது. உள்ளூர் போலீசாரை நம்பி முக்கிய குற்றவாளிகளை பிடிக்க சென்றால் நம்முடைய கதி அதோ கதி தான் என அந்த போலீஸ் அதிகாரி குமுறுகிறாராம்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vellore district ,kerosene kanam , Vellore district,police,kerosene,kanam royal
× RELATED வெயிலின் தாக்கத்தை குறைக்க வீதிகளில்...