மிரட்டிய எஸ்ஐ; மிரள வைத்த மக்கள்

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் உள்ள பட்டம்புதூர் மீனாட்சிபுரம் பகுதி மக்கள், தங்கள் பகுதிக்கு சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு, வாக்குப்பதிவு நடந்த கடந்த 18ம் தேதி தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒட்டுமொத்த வாக்காளர்களும் ஒன்று திரண்டு நின்றபடி, ‘‘எத்தனையோ மனுக்கள் போட்டும் ஏன்னு கேக்கல... இப்பவாவது கட்டாயம் செய்றோம்னு எழுதி கையெழுத்து போட்டுத்தாங்க.. அப்போதான் ஓட்டுப்போடுவோம்’’ என்று கறாராக கூறி விட்டனர்.

அப்போது சமரசம் செய்ய வந்த ‘ரா’வில் பெயர் துவங்கும் எஸ்ஐ ஒருவர் தோரணையாக, ‘‘ஒழுங்கா ஓட்டைப் போட்டுட்டு வீட்டுக்குப் போங்க... இந்த கூட்டம் கூட்டுற வேலையெல்லாம் இங்கே வேணாம்...’’ என மிரட்டலாகக் கூற மக்கள் வெகுண்டெழுந்தனர். ‘‘நாங்களும் அதைத்தான் கேட்கிறோம்... ஓட்டுச்சாவடிக்குத் தூரமா நின்று, எங்க உரிமையைக் கேட்க வந்திருக்கோம்... உங்களை யாரு இங்கே கூப்பிட்டது’’ என்றபடி எதிர்க்க, அங்கே பெரும் மோதல் சூழ்நிலை வந்தது. இதனை கண்டு சிவத்தில் பெயர் துவங்கும் ஏஎஸ்பி ஓடி வந்து, ‘‘உணர்வுப்பூர்வமா கூடியிருக்குற கூட்டத்துல, நம்மோட மிரட்டல் வேகாதுப்பா. பார்த்து பக்குவமா பேசு... வேகத்தை விடு. வேண்டுதலாய்தான் கேட்கணும்’’ என்று அட்வைஸ் பண்ணி சென்றாராம்... அதன் பிறகு சமாதானமாய் பேசி மக்களை ஓட்டு போட வச்சாங்களாம்.

ஆரணியில் கூடாரமடித்துள்ள காக்கி அதிகாரிகள்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் திரி ஸ்டார் அதிகாரியான முழுமுதற் கடவுளின் பெயரை கொண்டவர் 6 ஆண்டுகளாக அங்கேயே சுற்றி வருகிறாராம். அதேபோல் அவருக்கு மேலதிகாரியான முழுமுதற் கடவுளின் தம்பியின் பெயரை கொண்டவரும் திருவண்ணாமலை மாவட்டத்திலேயே சுற்றி சுற்றி வருகிறாராம். கலசப்பாக்கம், செங்கம், ஆரணி, வேட்டவலம் என்று சுற்றி வந்தவர் பதவி உயர்வு பெற்ற பிறகும் தனக்கு பிடித்த ஆரணியை கேட்டு வாங்கி வந்துவிட்டாராம். இதற்கு உள்ளூர் அமைச்சர்தான் காரணமாம். அவர்கள் ஆரணியை விரும்புவதற்கு மணல், காட்டன் சூதாட்டம் என வருவாய் குவிவது தானாம். புகார்கள் மேலிடத்துக்கு சென்றாலும் மந்திரி  நிறுத்தி விடுகிறாராம். அதனால் லோக்கல் காக்கிகள் இந்த பூனைகளுக்கு யார் மணி கட்டுவது என்று புலம்பி வருகிறார்களாம்.

மணல் காட்டில், கரன்சி குளியல்...!

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து வரும் பவானி ஆறு, பவானி பகுதியில் கூடுதுறையில் காவிரி ஆற்றில் கலக்கிறது. இங்கு அதிகளவு மணல் இருப்பதால், மணல் திருட்டு அதிகரித்து வருகிறது. இதுகுறித்த தகவல் அளிக்க, மாவட்ட எஸ்.பி., தனிப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.ஆனால், கோபியில் பணியாற்றி வரும் தனிப்பிரிவு அதிகாரி ஒருவர், மணல் கடத்தல் கும்பலுக்கு துணை போகிறார்.காரணம், மணல் திருட்டு கும்பல், கரன்சியால் குளிப்பாட்டி விடுகிறது. சில மாதங்களுக்கு முன்பு இ்ந்த அதிகாரி மீது புகார் வந்த நிலையில் இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால், உள்ளூர் அமைச்சர் தயவில் மீண்டும் அங்கேயே வந்துவிட்டாராம்.

ஆன்லைன் எப்.ஐ.ஆரை திருத்தும் நாகை மாவட்ட கில்லாடி போலீஸ்

நாகை மாவட்டம் நாகூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த மாதம் 2 மணல் லாரியை போலீசார் பொறி வைத்து பிடித்தனர். பிடிபட்ட 2 லாரிகளையும் கைப்பற்றிய போலீசார் டிரைவர், லாரி உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து டிரைவர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் கைது செய்யப்பட்ட டிரைவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதற்கான ஆவணங்களை கோர்ட் ஏட்டு நீதிமன்றத்திற்கு எடுத்து சென்றார். நாகை நீதிமன்றத்தில் இருந்த போது கோர்ட் ஏட்டை தொடர்பு கொண்ட நாகூர் காவல் நிலைய கம்ப்யூட்டர் ஆப்ரேட்டரான பெண் போலீஸ் குறிப்பிட்ட ஒரு எப்ஐஆரில் லாரி உரிமையாளர் பெயரை மட்டும் நீக்க இன்ஸ்பெக்டர் கூறியதாக கூறினார். இதனை வேத வாக்காக எடுத்து கொண்ட ஏட்டும் எப்ஐஆரில் உள்ள குறிப்பிட்ட லாரி உரிமையாளர் பெயரை ஒயிட்னரால் அழித்துவிட்டு நீதிமன்றத்தில் எப்ஐஆர் நகலை வழங்கினார். இதில் பிடிப்பட்ட மற்றொரு லாரி உரிமையாளருக்காக ஆஜரான வக்கீல் பிடிபட்டது இரண்டு லாரிகள் ஆனால் எனது தரப்பு லாரி உரிமையாளர் மீது மட்டும் வழக்கு போடப்பட்டுள்ளது. ஏன் மற்றொரு லாரி உரிமையாளரை வழக்கில் சேர்க்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது நாகூர் இன்ஸ்பெக்டர் காதுக்கு சென்றதை அடுத்து காலை நடந்த ரோல்காலின் போது காவல் நிலையத்தில் உள்ள அனைத்து காவலர்களை வைத்து யார் இதை செய்தது என்று இன்ஸ்பெக்டர் கேட்க, கோர்ட் ஏட்டோ தான் செய்ததாக கூறி அந்த கம்யூட்டர் பெண்ணை காட்டி கொடுக்காமல் இருந்து விட்டார். இந்த செய்தி கால தாமதமாக நாகை எஸ்.பி.க்கு சென்றதை அடுத்து பெண் ஆபரேட்டரை நாகை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்தார். ஆன்லைனில் பதிவு செய்யப்படும் எப்ஐஆர் நகலை திருத்த யாருக்கும் அதிகாரம் கிடையாது என்ற நிலையில் கோர்ட்டில் வழங்கப்பட்ட எப்ஐஆரை திருத்தியது பெரும் சர்ச்சைைய ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: