4 தொகுதிக்கான இடைத்தேர்தல் மு.க.ஸ்டாலின் 8 நாள் பிரசாரம்: ஓட்டப்பிடாரத்தில் 1ம் தேதி தொடங்குகிறார்

சென்னை: நான்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் “மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில்  போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் 8 நாட்கள் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.தமிழகத்தில் காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்ேதர்தல் மே 19ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 22ம் தேதி (நாளை) தொடங்குகிறது. 29ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். ஏப்ரல் 30ம் தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. மே 2ம் தேதி மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள். மே 19ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணிக்கை  மே 23ம் தேதி நடக்கிறது. இத்தேர்தலில் திமுக சார்பில் சூலூர் தொகுதியில் பொங்கலூர் பழனிச்சாமி, அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜி, திருப்பரங்குன்றத்தில் டாக்டர் பி.சரவணன், ஓட்டப்பிடாரத்தில் எம்.சி.சண்முகையா ஆகியோர் போட்டியிடுகின்றனர். தொடர்ந்து திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் (தனி), அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கான பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் 4 தொகுதிக்கான பொறுப்பாளர்கள், உறுப்பினர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று காலை ஆலோசனை நடத்தினார். அப்போது 4 தொகுதிக்கான வெற்றி வியூகங்கள் மற்றும் பிரசார வியூகங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆலோசனைக்கு பிறகு திமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிவிப்பு:வரும் மே 19ம் தேதி நடைபெற உள்ள திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் (தனி), அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய நான்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் “மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி”யின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளும் முதல் கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளார்.வரும் 1, 2ம் தேதி ஓட்டப்பிடாரம் (தனி) தொகுதியிலும், 3, 4ம் தேதி திருப்பரங்குன்றம் தொகுதியிலும், 5 மற்றும் 6ம் தேதி சூலூர் தொகுதியிலும், 7, 8ம் தேதிகளில் அரவக்குறிச்சி தொகுதியிலும் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: