போதமலையில் சாலை அமைத்த இளைஞர்களுக்கு 1.50 லட்சம் அபராதம்

ராசிபுரம்: ராசிபுரம் அருகே, போதமலை மலைப்பகுதியில் பல ஆண்டுகளாக சாலை வசதியில்லாமல்  சிரமப்பட்டதால், தன்னிச்சையாக சாலை அமைத்த 5 இளைஞர்களுக்கு வனத்துறையினர் 1.50 லட்சம் அபராதம் விதித்தனர்.  இது மலைகிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ளது போதமலை மலைக்கிராமம். கடல்மட்டத்திலிருந்து சுமார் 3 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள போதமலையில், மேலூர், கீழூர் மற்றும் கெடமலை என 3 குக்கிராமங்கள் உள்ளது. இந்த கிராம மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க 11 கிலோ மீட்டர் கரடுமுரடான பாதை வழியாக தான் கீழே வரவேண்டும். இந்த பகுதியில் சாலை வசதி கேட்டு, அவர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும், எந்தவித நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில், அரசை எதிர்பார்த்து சோர்ந்து போன மலைவாழ் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர், பொக்லைன் இயந்திரத்தை வைத்து, யாருக்கும் தெரிவிக்காமல் கெடமலைப்பகுதியில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த நாமக்கல் மாவட்ட வனஅலுவலர் காஞ்சனா உத்தரவின் பேரில், ராசிபுரம் வனச்சரக அலுவலர் பெருமாள் தலைமையிலான வனச்சரகர்கள் சென்று பார்த்தபோது, அங்கு  தன்னிச்சையாக காடுகளில் பாதை அமைத்தது தெரியவந்தது. இதையடுத்து, அதே பகுதியை சேர்ந்த அண்ணாமலை, மணிகண்டன், தங்கவேல், மனோகரன், குப்பன் ஆகிய 5 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களுக்கு தலா 30 ஆயிரம் வீதம் 1.50 லட்சம் அபராதம் விதித்து பின்னர் விடுவித்தனர். சாலை வசதி இல்லாததால், தன்னிச்சையாக சாலை அமைக்க முயற்சி செய்த இளைஞர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம், மலைகிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: