தமிழகத்தில் 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் முடிந்துள்ள நிலையில் ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. தமிழகத்தில் 38 மக்களவை தொகுதி மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த வியாழக்கிழமை (18ம் தேதி) நடந்து முடிந்தது. வேலூர் மக்களவை தொகுதியில் மட்டும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து, மே 19ம் தேதி ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதியில் நாளை (22ம் தேதி) வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. வருகிற 29ம் தேதி மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். 30ம் தேதி வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். மே 2ம் தேதி மாலை 3 மணி வரை வேட்புமனு வாபஸ் பெறலாம். அன்றைய தினம் மாலையே 4 தொகுதியில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படும். இந்த 4 தொகுதியில் பதிவாகும் வாக்குகள் வருகிற மே 23ம் தேதி மக்களவை தேர்தலின்போது பதிவான வாக்குகளுடன் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். தமிழகத்தில் மீண்டும் 4 தொகுதிக்கும் தேர்தல் நடைபெற உள்ளதால், இன்னும் ஒரு சில தினங்களில் அங்கு பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கும். தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் 4 சட்டமன்ற தொகுதியை முற்றுகையிட்டு மீண்டும் தங்கள் பிரசாரத்தை முழு வேகத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளனர். இதில் திமுக மட்டும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: