மோடியை விட தேவேகவுடா சிறந்த பிரதமராக மக்களுக்கு சேவை செய்தார் : முதல்வர் குமாரசாமி

பெங்களூர் : மோடியை விட தனது தந்தை தேவேகவுடா சிறந்த பிரதமராக மக்களுக்கு சேவை செய்ததாக கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார். தேவேகவுடாவின் ஆட்சிக்காலத்தில் நாடு மிகவும் அமைதியாக இருந்தது, ஒரு பயங்கரவாத தாக்குதல் கூட நடைபெறவில்லை என்றும், நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு விஷயத்திலும் தேவேகவுடா அதிக அக்கறை செலுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். தேவேகவுடா ஆட்சியின்போது இந்தியா-பாகிஸ்தான் இடையே எந்த மோதலும் நடைபெறவில்லை என்று கூறிய அவர், காஷ்மீரில் ஒரு குண்டுவெடிப்பு கூட நடக்கவில்லை, நாட்டிற்குள்ளேயும் வெடிகுண்டு தாக்குதல் நடக்கவில்லை என்றும் கூறினார்.

பாலக்கோட் விமான தாக்குதலை மக்களவை தேர்தலில் தனது அரசியல் ஆதாயத்துக்காக மோடி பயன்படுத்துவதாகவும், இதுவரை எந்த பிரதமரும் இதுபோன்று இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த சண்டையில் ஆதாயம் தேடவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். தேவேகவுடாவின் 10 மாத ஆட்சிக்காலத்தில் என்ன நடந்தது, மோடியின் 5 ஆண்டு கால ஆட்சியில் என்ன நடந்தது என்பதை ஆவணங்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம் என அவர் கூறினார். தனது தந்தை நல்ல நிர்வாகத்திறமை உள்ள அனுபவமிக்க தலைவர். அரசியல் வாழ்க்கையில் அவருக்கு அனுபவம் உள்ளது.

என்னை பொறுத்தவரை தேவேகவுடா அனைவரையும் விட சிறந்தவர். ஆனால் தற்போது அவருக்கு அரசியலில் ஆர்வம் இல்லை என்பதால், ராகுல் காந்தியை பிரதமராக முன்மொழிந்துள்ளதாகவும், ராகுல் வெற்ற பெற சிறந்த அறிவுரைகளை தேவேகவுடா வழங்குவார் என்றும் குமாரசாமி கூறியுள்ளார். மேலும் கர்நாடகா மக்கள் தன் மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும், காங்கிரசுடன் இணைந்து மக்களுக்கு நல்லது செய்துள்ளார் என்பதை மக்கள் அறிவர் என்றும், மாநில வளர்ச்சியை எதிர்பார்தது கொண்டிருக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தேவேகவுடா 1996ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி முதல் 1997ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி வரை பிரதமராக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: