பட்டியலிடப்படாத நிறுவனங்கள் மீது கண்காணிப்பு வரி பயத்தில் முதலீட்டாளர்கள் திக் திக்

புதுடெல்லி: வருமான வரி கணக்கு தாக்கல் படிவத்தில் புதிய விவரங்கள் கேட்கப்படுவதால், பட்டியலிடப்படாத நிறுவனங்களில் முதலீடு செய்தவர்கள், வரி விதிப்பில் சிக்கிக்கொள்ளாமல் தவிர்க்க அவசரம் அவசரமாக முதலீட்டை விலக்கி வருகின்றனர். வரிகள் மூலமான வரும் வருவாயை அதிகரிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஜிஎஸ்டி மற்றும் பல்வேறு கெடுபிடிகள் தாண்டி வருவாய் ஆண்டு தோறும் அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது. இருப்பினும் ஒவ்வோர் ஆண்டும் வரி வசூல் இலக்கை மத்திய அரசு அதிகரித்து வருகிறது.

Advertising
Advertising

இதற்கேற்ப மத்திய நேரடி வரிகள் ஆணையம், மண்டலம் வாரியாக இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த நிலையில், புதிய வருமான வரி தாக்கல் படிவத்தில் கேட்கப்படும் விவரங்கள், வரி செலுத்துவோர், முதலீட்டாளர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி, முதலீட்டாளர்கள் தங்கள் வருவாய் மற்றும் பட்டியலிடப்படாத நிறுவனங்களில் அவர்கள் மேற்கொண்ட முதலீடுகள், இயக்குநர் பொறுப்பில் அல்லது இயக்குநர் குழுவில் அங்கம் வகித்தால் அதன் விவரங்கள் ஆகியவற்றையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்று வருவாய்த்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த விவரங்கள் கடந்த நிதியாண்டு மார்ச் 31 நிலவரப்படி பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும். இதுமட்டுமின்றி, பட்டியலிடப்படாத நிறுவனங்கள் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் முதலீட்டாளர்கள் தாக்கல் செய்யும் வருமான வரி படிவங்களை ஒப்பீடு செய்து விசாரணை நடத்த வருமான வரி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதை தொடர்ந்து, பல்வேறு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை விலக்கிக் கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து வருமான வரி வட்டாரங்கள் கூறியதாவது:

கம்பெனிகள் பதிவேட்டில் உள்ள கம்பெனிகளின் வரவு செலவு, முதலீடு விவரங்கள் அனைத்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இவை வரி செலுத்துவோர் தாக்கல் செய்யும் விவரங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்பட உள்ளது. பட்டியலிடப்படாத நிறுவனங்களில் முதலீடு செய்த பலர் வருமான வரி படிவத்தில் முதலீட்டு விவரங்களை குறிப்பிடுவதில்லை. இனி இவ்வாறு செய்ய இயலாது. வருமான வரி சட்டம் மட்டுமின்றி, கருப்பு பண தடுப்பு சட்டத்தின் அடிப்படையிலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

பட்டியலிடப்படாத நிறுவனங்களிடம் முதலீட்டாளர் பற்றிய விவரங்களை கேட்டுள்ளோம். சில நிறுவனங்கள் சமர்ப்பித்துள்ளன. சில முதலீட்டாளர்கள் இந்த நிறுவனங்களில் மேற்கொண்ட முதலீடு மூலம் மூலதன ஆதாயம் பெற்றுள்ளனர். அவற்றை மறைத்து வரி ஏய்ப்பு செய்கின்றனர். சந்தேகத்துக்கு இடமான முதலீட்டாளர்களின் விவரங்களை சேகரித்து வைத்துள்ளோம். முதல்கட்டமாக இவர்கள் சமர்பித்த விவரங்கள் ஆராயப்பட்டு விளக்கம் கேட்கப்படும் என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: