உலக கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இடம்பிடித்த ஜோ டேன்லி!

லண்டன்:  இங்கிலாந்து அணிக்காக  10 ஆண்டுகளாக சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடாத ஜோ டேன்லி உலக கோப்பைக்கான அணியில்  இடம்  பெற்றது  ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கிரிக்கெட் போட்டியின் தாயகம் இங்கிலாந்து. ஆனால் ஒருமுறை கூட இங்கிலாந்து அணி உலக கோப்பையை வென்றதில்லை.  முதல் 3 உலக கோப்பை  போட்டிகளும்  இங்கிலாந்தில்தான் நடைப்பெற்றன.ஆனால்  சாம்பியன் பட்டம் இங்கிலாந்துக்கு பகல் கனவாகவே உள்ளது. இத்தனைக்கும் 1979, 1987, 1992ம் ஆண்டுகளில் இறுதிப் போட்டிக்கு  முன்னேறியும் உலக கோப்பையை அந்த அணியால் முத்தமிட முடியவில்லை.இப்போது 12வது உலக கோப்பையை 36 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து நடத்த உள்ளது. இந்த முறை கோப்பை வெல்லும் கனவுடன் உலக கோப்பைக்கான 15 பேர் கொண்ட  அணியை இங்கிலாந்து அறிவித்துள்ளது.இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியில்  ஐபில் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஜோப்ரா ஆர்சர்(24), கிங்ஸ் லெவன் பஞ்சாப்  வீரர் சாம் கரண்(20), சென்னை சூப்பர் கிங்ஸ் வீர் சாம் பில்லிங்ஸ்(27) ஆகியோர் இடம் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால்  இவர்கள்   அணியில் இடம் பெறவில்லை.   ஜோப்ரா இதுவரை சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடாததுதான் அணியில் இடம் கிடைக்காததுக்கு காரணம்  என்று கூறப்படுகிறது. இவர் முதல் தர போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார்.  உலக கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இடம் கிடைக்காவிட்டாலும் பாகிஸ்தானுக்கு  எதிரான ஒரு டி20, 5 ஒருநாள் போட்டியில் விளையாட உள்ள அணியில் ஜோப்ரா இடம் கிடைத்துள்ளது. இந்தப் போட்டிகள் உலக கோப்பை போட்டிக்கு முன்னதாக மே 5ம் தேதி  முதல் மே 19ம் தேதி வரை நடைபெற உள்ளன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் சாம் பில்லிங்சுக்கும்(27) அணியில் இடம் கிடைக்கவில்லை. அணியில் ஜோஸ் பட்லர், ஜானி பேர்ஸ்டோ என 2 விக்கெட்  கீப்பர்கள் உள்ளதால் 3வது விக்கெட் கீப்பருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் இவருக்கும் ஜோப்ராவை போல் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட உள்ள இங்கிலாந்து  அணியில் இடம் கிடைத்துள்ளது.இங்கிலாந்து அணிக்காக ஆல் ரவுண்டர் சாம் கரண்  9 டெஸ்ட் போட்டிகளிலும், 2 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடி உள்ளார்.

டெஸ்ட் போட்டி அளவுக்கு ஒருநாள் போட்டிகளில் சுமாராக விளையாடாததால் உலக கோப்பை அணிக்கு அவர் தேர்வு செய்யப்படவில்லை என்கிறார்கள். யார் இந்த ஜோ டேன்லி? அதேநேரத்தில் அணியில் ஜோ டேன்லி(33) இடம் பிடித்ததுதான் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்  இங்கிலாந்து அணிக்காக  2 டெஸ்ட், தலா 9 ஒருநாள்  மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். கடைசியாக 2009ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் இடம் பெற்றார். அதில் 2 போட்டிகள் ரத்து  செய்யப்பட்டன. மீதி 3 போட்டிகளில் அவர் ஒரு போட்டியில் கூட ஆடும் அணியில் இடம் பெறவில்லை.

இந்த ஆண்டுதான் சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.  இந்த ஆண்டு பிப்ரவரியில் நடைப்பெற்ற போட்டியில் மேற்கு இந்திய அணிக்கு எதிராக 2  டெஸ்களில்  விளையாடினார். டெஸ்ட் போட்டியை விட ஒருநாள் போட்டிகளி சுமாராக விளையாடி உள்ளார். தேசிய அணியில் இடம் பெறாவிட்டாலும் கடந்த 10 ஆண்டுகளாக  கென்ட், இங்கிலாந்து லயன் உள்ளிட்ட உள்ளூர் அணிகளுக்காக தொடர்ந்து அதிரடியாக விளையாடி உள்ளது  குறிப்பிடத்தக்கது. அதுதான் தேர்வுக் குழு ஜோ டென்லியை உலக கோப்பைக்காக தேர்வு செய்ய முக்கிய காரணம். இவர் இப்போது ஐபிஎல் தொடரில்  கொல்கத்தா அணியில்  இடம் பெற்றுள்ளார். அந்த அணி ஜோ டேன்லியை ஒரு கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.உலக கோப்பைக்கான இங்கிலாந்து அணி: இயன் மோர்கன்(கேப்டன்), மொயீன் அலி,  ஜானி பேர்ஸ்டோ,  ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்),  டாம் கரண், ஜோ டேன்லி,  அலெக்ஸ்  ஹால்ஸ்,  லியம் பிளங்கெட்,  அடில் ரஷீத்,  ஜோ ரூட், ஜாசன் ராய்,  பென் ஸ்டோக்ஸ், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் உட்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: