மது குடிக்க பணம் தர மறுத்ததால் ஆத்திரம் ஏரியில் மூழ்கடித்து பெண் கொலை: நகைகளுடன் தப்பிய 2 பேர் கைது

பூந்தமல்லி: சென்னை திருவேற்காடு, மாதிரா வேடு, பத்மாவதி நகரை சேர்ந்தவர் கோவிலன் (42).  இவரது மனைவி தனலட்சுமி (35). கட்டிட தொழிலாளர்கள். கடந்த 15ம் தேதி காலை தனலட்சுமி மாயமானார். அவரை வேலைக்கு அழைத்துச் சென்ற, அதே பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தி (32), ஏழுமலை (41) ஆகியோரிடம் விசாரித்தபோது மழுப்பலாக பேசியுள்ளனர்.

இதனால் சக்கரவர்த்தி மற்றும் ஏழுமலை இருவர் மீதும் சந்தேகம் உள்ளதாக திருவேற்காடு போலீசில் கோவிலன் புகார் அளித்தார். இதுகுறித்து திருவேற்காடு இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்கு பதிவு செய்து விசாரித்தபோது சக்கரவர்த்தி மற்றும் ஏழுமலை திருவண்ணாமலை சென்றது தெரிந்தது.

போலீசார் திருவண்ணாமலை சென்று இருவரையும் அழைத்து வந்து விசாரித்தபோது தனலட்சுமியை செம்பரம்பாக்கம் ஏரிப்பகுதிக்கு அழைத்து சென்று கொலை செய்து, நகைகளை பறித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறியதாவது: கோவிலன், தனலட்சுமி, சக்கரவர்த்தி, ஏழுமலை ஆகிய 4 பேரும் கட்டிட தொழிலாளர்கள். இதில், சக்கரவர்த்திக்கும், தனலட்சுமிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. வழக்கம்போல் 15ம் தேதி தனலட்சுமியை சக்கரவர்த்தி வேலைக்கு அழைத்து சென்றுள்ளார். வேலை இல்லாத காரணத்தால் 3 பேரும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு சென்று மீன் பிடிக்க சென்றுள்ளனர். மாலை மது அருந்த பணம் வேண்டும் என்று கேட்டுள்ளனர். மேலும், தேர்தலை முன்னிட்டு தொடர்ந்து 3 நாட்களுக்கு மதுபானக்கடை விடுமுறை என்பதால் கூடுதலாக மது வாங்கி வைக்க என தனலட்சுமியிடம் பணம் கேட்டுள்ளனர்.

தனலட்சுமி, தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதால் ஆத்திரமடைந்த சக்கரவர்த்தி, தனலட்சுமியை அடித்து உதைத்து தாக்கியதில், அவர் மயங்கி கீழே விழுந்துள்ளார். அப்போது, அவர் அணிந்திருந்த 2 சவரன் நகைகளை இருவரும் எடுத்துக் கொண்டனர். மயக்கம் தெளிந்தால், தனலட்சுமி தங்களை போலீசிடம் காட்டி கொடுத்து விடுவாரோ என பயந்து தண்ணீரில் தனலட்சுமியின் முகத்தை அமுக்கி கொலை செய்துள்ளனர். பின்னர், அவரது சடலத்தை அங்குள்ள முட்புதரில் வீசி விட்டு நகையை பூந்தமல்லியில் உள்ள ஒரு அடகு கடையில் வைத்துள்ளனர்.  

பின்னர், பணத்தை வாங்கிக்கொண்டு மூன்று நாட்களுக்கு வேண்டிய மதுபானங்களை வாங்கிக்கொண்டு திருவண்ணாமலை சென்று அங்கு நன்றாக குடித்து உள்ளனர். இவ்வாறு தெரியவந்ததை அடுத்து முட்புதரில்  கிடந்த தனலட்சுமி சடலத்தை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: