மாதவரத்தில் உள்ள அதிமுக பிரமுகர் வீட்டில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் வருமான வரித்துறையினர் சோதனை

திருவள்ளூர்: சென்னையை அடுத்த மாதவரத்தில் உள்ள அதிமுக பிரமுகர் வீட்டில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மாதவரம் சட்டமன்ற தொகுதியின் மாத்தூர் எம்எம்டிஏ பகுதியில் அதிமுக பிரமுகரான மகாதேவன் வசித்து வருகிறார். இவர் சுபத்ரா டிராவல்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமாக கோயம்பேட்டில் 5 பேருந்துகளும், 3 கன்டெய்னர் லாரிகளும் இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றிரவு இவரது வீட்டில் ஏராளமான அதிமுகவினர் குவிந்ததாக தெரிகிறது. அதுமட்டுமல்லாது, வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக இவரது வீட்டில் பல லட்ச ரூபாய் பணம் பதுக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் பறக்கும்படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, மாதவரம் தேர்தல் பறக்கும் படை அதிகாரி வேதநாயகி தலைமையில் 5க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மகாதேவன் வீட்டில் சோதனையிட்டனர். அப்போது பணம் இருப்பது உறுதி செய்யப்பட்டதால், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், வருமான வரித்துறையினருக்கு தகவலளித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த வருமான வரித்துறை அதிகாரிகள் மகாதேவன் வீட்டில் சோதனை செய்து வருகின்றனர். வருமான வரித்துறையினரின் சோதனை முடிந்த பின்பே அதிமுக பிரமுகர் வீட்டில் எவ்வளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் பறக்கும் படை மற்றும் வருமான வரித்துறையினரின் சோதனையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சோதனையால் அதிமுகவினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED விழுப்புரம் ஏஎஸ்பி வீட்டில் 2வது முறையாக திருட்டு