மதுரை மக்களவை தொகுதி தேர்தலை ரத்து செய்யக் கோரிய வழக்கு: தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

மதுரை:  மதுரை மக்களவை தொகுதி தேர்தலை ரத்து செய்யக் கோரிய சுயேச்சை வேட்பாளர் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மதுரையை சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் கே.கே.ரமேஷ் என்பவர் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக கடந்த 10ம் தேதி, அவர் தொடுத்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, கடந்த மார்ச் 31ம் தேதியன்று சௌராஷ்டிரா இன மக்களுடன் அதிமுக கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் சுமார் 4000 பேர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு இனிப்பு வகைகள், உணவு மற்றும் நபர் ஒருவருக்கு தலா 500 ரூபாய் வழங்கப்பட்டிருந்தது. அதுமட்டுமில்லாமல் கூட்டத்திற்கு வருகை புரிந்தவர்களை அரசு பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்களில் அழைத்து வந்துள்ளனர். இது தேர்தல் விதிகளுக்கு எதிரானது என்றும், இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் புகார் தெரிவித்திருந்தார். தேர்தலுக்காக கட்சிகள் கோடிக்கணக்கில் பணப்பட்டுவாடா மற்றும் பணம் செலவு செய்து வருவதாக குற்றம் சாட்டினார். இந்த சூழலில் மதுரையில் மக்களவை தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த இயலாது.

எனவே மக்களவை தேர்தலை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் மணிகுமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியதாவது, தேர்தல் பறக்கும் படையினர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், பணப்பட்டுவாடாவை தடுக்க தேவையான எல்லா நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து, பொதுநலம் என்ற பெயரில் இதுபோல வழக்கு தொடர்வதை வாடிக்கையாக வைத்துள்ளார் என்றும், நீதிமன்ற நேரத்தை வீணடித்த காரணத்திற்காக கே.கே.ரமேஷ்க்கு ஏன் அபராதம் விதிக்கக்கூடாது? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டதையடுத்து அபராதம் ஏதும் விதிக்காமல் இந்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED மூளைகாய்ச்சல் பலி நிலவரம் குறித்து...