வாக்குப்பதிவு மையத்தின் எல்லைக்குள் பொதுமக்கள் செல்போன் பயன்படுத்த தடை: சத்யபிரதா சாஹு அறிவிப்பு

சென்னை:  நாளை மாலை 6 மணி முதல் வரும் 18ம் தேதி வரை 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு பிரச்சாரம் செய்யக்கூடாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களவை தேர்தல் முடியும் வரை அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய கூடாது என உத்தரவிட்டுள்ளார். மே 19 ம் தேதி காலியாக உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதேசமயம், வாக்குப்பதிவு மையத்தின் 100 மீட்டர் எல்லைக்குள் பொதுமக்கள் செல்போன் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். ஆனால், தேர்தல் நடத்தும் அதிகாரிகள், காவல் உயரதிகாரிகள் செல்போன் பயன்படுத்த தடை இல்லை என கூறியுள்ளார்.

அதேபோல், நாளை மாலை 6 மணி முதல் தேர்தல் முடியும் வரை மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவின் விதிமுறைகள் செயல்பாட்டில் இருக்கும் என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, நாளை மாலை 6 மணிக்கு மேல் தேர்தல் விவகாரம் குறித்து வாட்ஸ்அப், முகநூல் மற்றும் ட்விட்டர் போன்றவற்றில் செய்திகள் பரப்பக்கூடாது என கட்டுப்பாடு விதித்துள்ளார். அதேபோன்று, தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ யாரும் நடத்தவோ, பங்கேற்கவோ கூடாது என தேர்தல் ஆணையம் நிபந்தனை விதித்துள்ளது. குறுஞ்செய்தி, இணையம் உட்பட எந்த மின்னணு தகவல் தொடர்பிலும் தேர்தல் விவாகரம் குறித்து பகிரக்கூடாது என சாஹு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் 2 தினங்களே உள்ள நிலையில், தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தலைமையில் தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு சோதனை நடைபெற்று வருகிறது. அதன்படி, தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.132.91 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சாஹு தெரிவித்துள்ளார். அதில், உரிய ஆவணங்கள் வழங்கப்பட்டதையடுத்து ரூ.65.01 கோடி பணம் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அதேபோல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலின் படி, மேற்கொள்ளப்பட்ட வருமான வரி சோதனையில் ரூ.55.02 கோடி பணம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். குறிப்பாக, எம்.எல்.ஏ விடுதியில் நடத்தப்பட்ட சோதனை குறித்து இதுவரை எந்த தகவலும் தேர்தல் ஆணையத்திற்கு வரவில்லை என கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED கலெக்டர் அறிவிப்பு சின்னதாராபுரம்...