வருமான வரித்துறை சீலை உடைத்து ஹார்ட் டிஸ்கை திருடிய பைனான்சியர் : போலீசார் விசாரணை

சென்னை: சென்னையில் வருமான வரித்துறை சீலை உடைத்து ஹார்ட் டிஸ்கை திருடிய சுஷில் லால்வாலி என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புரசைவாக்கம் கிளாமன்டஸ் சாலையில் பைனான்சியர் சுஷில் லால்வாலி வீட்டில் கடந்த 13ம் தேதிமுதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மூன்றாவது நாளாக இன்றும் சோதனை நடைபெற்று வந்த நிலையில், வருமான வரித்துறையினர் வைத்திருந்த சீலை உடைத்து நேற்றிரவு அலுவலக அறைக்குள் சென்று முக்கிய தகவல்கள் அடங்கிய ஹார்ட் டிஸ்கை பைனான்சியர் சுஷில் திருடிச்சென்றுள்ளார்.

இன்று காலை அலுவலகத்தில் ஆய்வு செய்த அதிகாரிகள், இதுகுறித்து வேப்பேரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனடிப்படையில் விசாரணை நடத்திய காவல் துறையினர் சுஷில் எடுத்துச்சென்ற ஹார்ட் டிஸ்கை பறிமுதல் செய்தனர். இந்த ஹார்ட் டிஸ்கை தற்போது வருமான வரித்துறை அதிகாரிகளிடம், காவல் துறையினர் ஒப்படைத்துள்ளனர். ஹார்ட் டிஸ்கில் ஏதேனும் தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளதாக என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். தகவல்கள் அழிக்கப்பட்டிருந்தால் அவற்றை திரும்ப கொண்டு வர தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவியையும் வருமான வரித்துறையினர் நாடி உள்ளனர். இதுகுறித்து சுஷில் லால்வாலியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED கொடுத்த கடனுக்காக வீடு புகுந்து...