டிக்-டாக் செயலி பதிவிறக்கம் செய்ய விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

டெல்லி : டிக்-டாக் செயலிக்கு உயர்நீதிமன்ற கிளை விதித்த தடையை நீக்க முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. டிக்-டாக் செயலிக்கு தடைவிதிக்க கோரி மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில் டிக்-டாக் செயலி இளைஞர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், பலர் அந்த செயலிக்கு அடிமையாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் பல்வேறு விதமான சமூக சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளதாகவும், பெண்கள் பதிவிடும் வீடியோக்களை சிலர் மார்பிங் செய்து ஆபாசமாக வெளியிடுவதால், பல பெண்கள் தற்கொலை செய்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

காவல் நிலையம், பள்ளி, கல்லூரி வகுப்பறைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் டிக்-டாக் வீடியோக்களை எடுத்து வருவதால் இளைஞர்கள் கடுமையாக அந்த செயலிக்கு அடிமையாகியுள்ளதாக தெரிவித்திருந்தார். இந்தோனேிசியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் டிக்-டாக் செயலிக்கு தடை விதித்துள்ளதாகவும், இதுபோன்ற சமுதாயத்தை சீர்குலைக்கும் செயலிகளை இந்தியாவிலும் தடை செய்ய வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் அமர்வு இது போன்ற செயலிகளை மத்திய அரசே முன்னின்று தடை செய்ய வேண்டும் என கூறினர்.

மேலும் டிக்-டாக் செயலிக்கு தடைவிதிப்பது குறித்து மத்திய தொலைத் தொடர்புத்துறை ஒழுங்கு முறை ஆணைய செயலாளர் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்திருந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், டிக்-டாக் செயலிக்கு உயர்நீதிமன்ற கிளை விதித்த தடையை நீக்க முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. வீடியோ பதிவை முறைப்படுத்துவதாக டிக்-டாக் நிறுவனம் உச்சநீதிமன்றம் வாக்குறுதி அளித்த நிலையிலும் தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த வழக்கு வரும் ஏப்., 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED மூளைகாய்ச்சல் பலி நிலவரம் குறித்து...