39 ரன் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் வெற்றி

ஐதராபாத்: லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 39 ரன் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீழ்த்தியது.ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச முடிவு செய்தார். அந்த அணியில் 18 வயது ஸ்பின்னர் அபிஷேக் ஷர்மா அறிமுகமானார். டெல்லி தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா 4 ரன், ஷிகர் தவான் 7 ரன் எடுத்து கலீல் அகமது வேகத்தில் ஆட்டமிழந்தனர். கோலின் மன்றோ - கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 49 ரன் சேர்த்தது. அதிரடியாக விளையாடிய மன்றோ 40 ரன் விளாசி அபிஷேக் பந்துவீச்சில் வெளியேறினார். அடுத்து ஷ்ரேயாஸ் 45 ரன், பன்ட் 23 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர்.

கிறிஸ் மோரிஸ் 4 ரன், கீமோ பால் 7 ரன் எடுத்து வெளியேறினார். டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன் குவித்தது. இதைத் தொடர்ந்து, 156 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக வார்னர், பியர்ஸ்டோ களம் இறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 9.5 ஓவரில் 72 ரன் எடுத்தது. பியர்ஸ்டோ 41 ரன், மறுமுனையில்  அரைசதம் அடித்த வார்னர் 51 ரன்னிலும் வெளியேறினர். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க எண்ணில் வெளியேற, 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஐதராபாத் அணி 116 ரன் எடுத்தது. இதன் மூலம் டெல்லி 39 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED உலகக்கோப்பை கிரிக்கெட்:...