ஆட்டோமொபைல்

புதிய பாதுகாப்பு வசதியுடன் பஜாஜ் பிளாட்டினா

பட்ஜெட் பைக் மாடல்களில் பஜாஜ் பிளாட்டினா 100 பைக் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. பஜாஜ் நிறுவனத்தின் மிக குறைவான விலை கொண்ட இந்த பைக் 32,000 முதல் 40,883 எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. இந்த நிலையில், வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய இருசக்கர வாகனங்களில் நவீன பிரேக் தொழில்நுட்ப அம்சம் சேர்க்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. இதனை மனதில் வைத்து பஜாஜ் பிளாட்டினா 100 பைக்கில் சிபிஎஸ் பிரேக் வசதி சேர்க்கப்பட்டு இருக்கிறது. இதன் கிக் ஸ்டார்ட் வேரியண்ட்டில் இப்புதிய பிரேக் வசதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக, இரண்டு சக்கரங்களுக்குமான பிரேக் பவர் சரியான விகிதத்தில் செலுத்தப்படுவதால், திடீரென பிரேக் பிடிக்கும்போதும் வண்டி சறுக்குவதையும், நிலைகுலைந்து கீழே விழும் வாய்ப்பையும் தவிர்க்கும்.

இந்த மேம்படுத்தப்பட்ட மாடலுக்கு 40,500 விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. புதிய சிபிஎஸ் பிரேக் வசதி சேர்க்கப்பட்டாலும், பஜாஜ் பிளாட்டினா 100 கிக் ஸ்டார்ட் மாடல் செல்ப் ஸ்டார்ட் மாடலைவிட 6,000 வரை குறைவான விலையில் இருப்பது கவனிக்கத்தக்க விஷயமாக இருக்கும். அதாவது, வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து மிக குறைவான விலையில் சிறந்த பட்ஜெட் மாடலாக இருக்கும். புதிய பிளாட்டினா 100 பைக்கில் 102சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 7.9 பிஎச்பி பவரையும், 8.3 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. வாடிக்கையாளர்களின் கையை கடிக்காத வகையில், மிகச்சிறப்பான மைலேஜை வழங்கும் மாடல்களில் ஒன்றாகவும் இருக்கிறது. புதிய வண்ணங்களில் இப்புதிய பஜாஜ் பிளாட்டினா 100 கிக் ஸ்டார்ட் மாடல் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் என கருதப்படுகிறது.

புதிய 1.5 லிட்டர் டீசல்  இன்ஜினுடன் மாருதி சியாஸ்

இந்தியாவின் மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் விற்பனையில் முன்னிலை வகிக்கிறது மாருதி சியாஸ் கார். போட்டியாளர்களை ஓரம் கட்டிவிட்டு, தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. மாருதி சியாஸ் காரில் பியட் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படும் 1.3 லிட்டர் டீசல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாருதியின் தாய் நிறுவனமான சுஸுகி சொந்தமாக உருவாக்கி இருக்கும் புதிய 1.5 லிட்டர் டீசல் இன்ஜினுடன் தற்போது சியாஸ் கார் விற்பனைக்கு வந்துள்ளது.  அடுத்த ஆண்டு அமலுக்கு வர இருக்கும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு இணையாக பியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் டீசல் இன்ஜினை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஆனால், இந்த இன்ஜினை அதிக முதலீடு செய்து மேம்படுத்த பியட் விரும்பவில்லை. இந்த சூழலில்தான் புதிய 1.5 லிட்டர் டீசல் இன்ஜினை சுஸுகி நிறுவனம் சொந்தமாக உருவாக்கி இருக்கிறது. இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் புதிய 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 94 பிஎச்பி பவரையும், 225 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இப்புதிய இன்ஜின் ஆரம்ப நிலையில் மிகச்சிறப்பான டார்க் திறனை வெளிப்படுத்தும் விதத்தில் டியூனிங் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த டீசல் இன்ஜினுடன் புதிய 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. முதல் கியருக்கு அருகில் ரிவர்ஸ் கியர் கொடுக்கப்பட்டு இருப்பதுடன், லிப்ட் லாக் தொழில்நுட்பத்துடன் வந்திருக்கிறது. இந்த மாடல் லிட்டருக்கு 26.82 கி.மீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இது மிகச்சிறந்த எரிபொருள் சிக்கனத்தை தரும் கார் மாடலாக தொடர்ந்து வாடிக்கையாளர் தேர்வில் முதன்மை வகிக்கும். இந்த 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் மாடலானது 9.97 லட்சம் முதல் 11.37 லட்சம் வரையிலான டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும். இப்புதிய 1.5 லிட்டர் டீசல் இன்ஜினுடன் சியாஸ் கார் வந்தாலும், 1.3 ஆப்ஷனும் அடுத்த ஆண்டு பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதி அமலுக்கு வரும் வரையில் விற்பனையில் இருக்கும்.

புதிய ஸ்கோடா ஆக்டேவியா கார்ப்பரேட் எடிசன்

இந்திய வாகன சந்தையில் தனக்கு பின்னடைவு வந்துவிடக்கூடாது என்பதை மனதில் கொண்டு, ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் இயங்கி வருகிறது. மேலும், புராஜெக்ட் 2.0 என்ற பெயரில் இந்திய வர்த்தகத்தை சீரமைக்கும் பணிகளில் ஸ்கோடா இறங்கி இருக்கிறது. அதன்படி, புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்யவும், இந்திய வாடிக்கையாளர்களை கவரும் விதத்திலான கார்களை உருவாக்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் முதல்படியாக, தனது பல பிரபல கார் மாடல்களை குத்தகை அடிப்படையில் வாங்கும் வாய்ப்பை இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஸ்கோடா நிறுவனம் வழங்கியது. இதைத்தொடர்ந்து, ஸ்கோடா சூப்பர்ப் காரின் விலை ₹2 லட்சம் வரை குறைத்து கார்ப்பரேட் எடிசன் என்ற பெயரில் அறிமுகம் செய்தது. இதற்கடுத்து, இப்போது ஸ்கோடா ஆக்டேவியா செடான் காரின் விலையையும் 1 லட்சம் வரை குறைத்து களமிறக்கி உள்ளது. ஸ்கோடா ஆக்டேவியா கார்ப்பரேட் எடிசன் என்ற பெயரில் இப்புதிய மாடல் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் பெட்ரோல் மாடலில் 1.4 லிட்டர் டிஎஸ்ஐ இன்ஜின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 148 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதில் உள்ள 2.0 லிட்டர் டிடிஐ டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 141 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும். பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 16.7 கி.மீ மைலேஜ், டீசல் மாடல் லிட்டருக்கு 21 கி.மீ மைலேஜ் வழங்கும் என ஸ்கோடா நிறுவனம் அறிவித்துள்ளது. பெட்ரோல் மாடல் 0-100 கி.மீ வேகத்தை எட்டுவதற்கு 8.1 வினாடிகளையும், டீசல் மாடல் 8.4 வினாடிகளையும் எடுத்துக்கொள்கிறது. இந்த காரில் க்வாட்ரா ஹெட்லைட், எல்இடி பகல்நேர விளக்கு, 16 அங்குல வெலோரம் அலாய் வீல் உள்ளிட்ட பல சிறப்பம்சங்கள் உள்ளன. 16.51 செ.மீ அளவிலான தொடுதிரையுடன்கூடிய இன்போடெயின்மென்ட் சாதனம், ஸ்மார்ட் லிங்க் தொழில்நுட்பம், 2 ஸோன் கிளைமேட் கன்ட்ரோல் வசதிகள் உள்ளன.

4 ஏர்பேக், இபிடியுடன்கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஹைட்ராலிக் பிரேக் அசிஸ்ட், ஆன்ட்டி ஸ்லிப் ரெகுலேஷன், எலக்ட்ரானிக் டிபரன்ஷியல் லாக், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், மல்டி கொலிஷன் பிரேக்கிங் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு தொழில்நுட்ப வசதிகளும் உள்ளன. பெட்ரோல் மாடலின் பேஸ் வேரியண்ட் விலை 50,000 வரையிலும், டீசல் மாடலின் பேஸ் வேரியண்ட் விலை 1 லட்சம் வரையிலும் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.  பெட்ரோல் மாடலின் பேஸ் வேரியண்ட் 15.49 லட்சத்திலும், டீசல் மாடலின் பேஸ் வேரியண்ட் 16.99 லட்சத்திலும் களம் இறக்கப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ 530ஐ எம் ஸ்போர்ட்

பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் காரில் அதிக தொழில்நுட்ப வசதிகள் நிரம்பிய புதிய வேரியண்ட் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. பிஎம்டபிள்யூ 530ஐ எம் ஸ்போர்ட் என்ற பெயரில் இப்புதிய வேரியண்ட் வந்துள்ளது. இதுவரை விற்பனையில் இருந்த 530ஐ ஸ்போர்ட் லைன் என்ற வேரியண்ட்டிற்கு மாற்றாக இது அறிமுகமாகியுள்ளது. பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் காரின் 520டீ மற்றும் 530டீ ஆகிய இரண்டு வேரியண்ட்டிற்கு இடையிலான விலை கொண்ட வேரியண்ட்டாக இது நிலைநிறுத்தப்பட்டுள்ளது. மேலும், விலக்கப்பட்டுள்ள 530ஐ ஸ்போர்ட் லைன் கார் ₹53.80 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்ட நிலையில், அதற்கு மாற்றாக வந்துள்ள இப்புதிய வேரியண்ட்டிற்கு 59.20 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிஎம்டபிள்யூ எம் வரிசை கார்களில் பயன்படுத்தப்படும் ஏராளமான சிறப்பு ஆக்சஸெரீகள் இதில் இடம்பெற்றுள்ளன.

இந்த காரில் விசேஷ பூச்சுடன்கூடிய முன்புற கிரில், மிரட்டலான பம்பர் அமைப்பு, அடாப்டிவ் எல்இடி ஹெட்லைட், பெரிய ஏர் டேம் பகுதி, இரட்டை வண்ணத்திலான பின்புற பம்பர் ஆகியவை கவர்ச்சியை கூட்டுகின்றன.

மேலும், காரின் பக்கவாட்டில் பொருத்தப்பட்டுள்ள சைடு ஸ்கர்ட், புதிய அலாய் வீல், நீல வண்ண எம் பிரேக் காலிபர், எம் வரிசை காருக்குரிய பேட்ஜ் ஆகியவை சாதாரண 5 சீரிஸ் காரிலிருந்து தனித்துவப்படுத்துகிறது. உட்புறத்திலும் ஏராளமான அம்சங்கள் உள்ளன. 10.25 அங்குல தொடுதிரையுடன்கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம் டியூவல் ஸோன் கிளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், அலுமினியம் வலையுடன்கூடிய அலங்கார அம்சங்கள், ஸ்போர்ட்ஸ் லெதர் இருக்கை, 6 வண்ணங்களில் ஒளிரும் மூட் லைட், வசீகரமான டகோட்டா லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, லெதர் உறையுடன் ஸ்டீயரிங் வீல் ஆகியவை இன்டீரியரை பிரிமீயமாக காட்டுகிறது.

மேலும், லான்ச் கன்ட்ரோல் தொழில்நுட்ப வசதியுடன் கூடிய 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: