×

மயாமி ஓபன் டென்னிஸ் 4வது சுற்றில் ஹாலெப் ஜோகோவிச் முன்னேற்றம்

மயாமி: அமெரிக்காவில் நடைபெறும் மயாமி ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் விளையாட, ரோமானியா வீராங்கனை சிமோனா ஹாலெப் தகுதி பெற்றார். மூன்றாவது சுற்றில் ஸ்லோவகியாவின் போலோனா ஹெர்காகுடன் (93வது ரேங்க்) மோதிய ஹாலெப் (3வது ரேங்க்) 5-7 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்த இரண்டாவது செட்டில், ஹாலெப் 7-6 (7-1) என வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது.  கடைசி செட்டில் போலோனாவின் சர்வீஸ் கேம்களை எளிதாக முறியடித்த ஹாலெப் 5-7, 7-6 (7-1), 6-2 என்ற செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 49 நிமிடத்துக்கு நீடித்தது. மற்றொரு 3வது சுற்றில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 6-3, 6-1 என்ற நேர் செட்களில் டாரியா கசட்கினாவை (ரஷ்யா) மிக எளிதாக வீழ்த்தினார்.

செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா தனது 3வது சுற்றில் பிரான்ஸ் வீராங்கனை ஆலிஸ் கார்னெட்டை எதிர்கொண்டார். முதல் செட்டை 6-7 (3-7) என்ற கணக்கில் இழந்த பிளிஸ்கோவா, பின்னர் சுதாரித்துக் கொண்டு விளையாடி 6-1, 6-4 என அடுத்த 2 செட்களையும் கைப்பற்றி 4வது சுற்றுக்கு முன்னேறினார். இப்போட்டி 2 மணி, 36 நிமிடத்துக்கு நடந்தது. முன்னணி வீராங்கனைகள் அனஸ்டேசியா செவஸ்டோவா (லாட்வியா), எலிஸ் மெர்டன்ஸ் (பெல்ஜியம்), டேனியல் கோலின்ஸ், ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) ஆகியோர் 3வது சுற்றில் அதிர்ச்சி தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறினர். ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) 7-5, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் அர்ஜென்டினாவின் பெடரிகோ டெல்போனிசை வீழ்த்தினார். மற்றொரு 3வது சுற்றில் பாடிஸ்டா அகுத்துடன் (ஸ்பெயின்) மோதிய பேபியோ பாக்னினி (இத்தாலி) 4-6, 4-6 என்ற நேர் செட்களில் தோற்று  வெளியேறினார்.

கனடாவின் மிலோஸ் ரயோனிச்சும் 4-6, 4-6 என நேர் செட்களில் இங்கிலாந்தின் கைல் எட்மண்டிடம் வீழ்ந்தார். முன்னணி வீரர்கள் ஜான் ஐஸ்னர் (அமெரிக்கா), நிகோலஸ் பாசிலாஷ்விலி (ஜார்ஜியா), போர்னா கோரிச் (குரோஷியா), நிக் கிர்ஜியோஸ் (ஆஸி.) ஆகியோரும் 4வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். ஆண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா - டெனிஸ் ஷபோவலாவ் (கனடா) ஜோடி 6-1, 6-2 என்ற நேர் செட்களில் கிரானோலர்ஸ் (ஸ்பெயின்) - நிகோலா மெக்டிச் (குரோஷியா) ஜோடியை எளிதாக வென்றது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Halleb Jogovich ,round , Miami Open Tennis, Halle Jogovich
× RELATED ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மின்டன்; 2வது சுற்றில் சிந்து