×

ஆந்திரா உள்ளிட்ட 20 மாநிலங்களில் முதல்கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் முடிவு

புதுடெல்லி: முதல்கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்றுடன் முடிந்தது. மக்களவை தேர்தல் வரும் 11ம் தேதி தொடங்கி 7 கட்டமாக நடக்கிறது. முதல் கட்டமாக, 20 மாநிலங்களில் உள்ள 91 மக்களவை தொகுதிகளில் ஏப்ரல் 11ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதோடு, ஆந்திரா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம் ஆகியவற்றில் ஒரே கட்டமாக மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும், ஒடிசாவில் 147 சட்டப்பேரவை தொகுதிகளில் முதல் கட்டமாக 28 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 18ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் என்பதால் பலரும் நேற்று மனுதாக்கல் செய்தனர். மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் மக்களவைத் தொகுதியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நேற்று மனுத்தாக்கல் செய்தார். கட்கரி கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளர் விலாஸ் முட்டம்வாரை 2.84 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

இம்முறை அதற்கும் கூடுதான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று கட்கரி கூறினார். அவருடன், மாநில முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் உடன் வந்தார்.  நாக்பூர் தொகுதியில் கட்கரியை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் நானா பட்டோலேவும் நேற்று மாலை வேட்புமனு தாக்கல் செய்தார். ஒடிசா முதல்வரும், பிஜூ ஜனதா தள தலைவருமான நவீன் பட்நாயக் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். தொடர்ந்து 19 ஆண்டாக முதல்வராக இருந்து வரும் அவர், பிஜேப்பூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடுகிறார். உபியின் மதுரா தொகுதியில் போட்டியிடும் பாஜ எம்பி ஹேமா மாலினி, காஷ்மீரின் நகரில் போட்டியிடும் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் நேற்று மனுதாக்கல் செய்தனர். இன்றும், நாளையும் மனுக்கள் பரிசீலிக்கப்படும். மனுவை வாபஸ் பெற நாளை மறு தினம் கடைசி நாளாகும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : elections ,states ,Andhra Pradesh , nomination, election, Andhra Pradesh
× RELATED ஆந்திர மாநிலம் விஜயவாடாவில்...