×

கரூரில் தம்பிதுரை மனு செய்ய கூடுதல் நேரம் ஒதுக்கீடு காங். பெண் வேட்பாளரை தடுத்து நிறுத்திய போலீஸ்: செந்தில்பாலாஜியை தள்ளிவிட்ட டி.எஸ்.பி.

கரூர்: காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தையும் தாண்டி அதிமுக வேட்பாளர் மனுதாக்கல் செய்தனர். இதனால், போலீசாருடன் காங்கிரசார் மற்றும்  தி.மு.க.வினர் வாக்குவாதம் செய்தனர். ஒரு கட்டத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியை நெஞ்சில் டி.எஸ்.பி. கைவைத்து தள்ளினார். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்று கடைசி நாளாகும். ஒரே ேநரத்தில் பல வேட்பாளர்கள் வருவதை தடுக்க, ஒவ்வொருவருக்கும்  வேட்பு  மனுதாக்கலுக்கான நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அதிமுக வேட்பாளர் தம்பிதுரைக்கு முற்பகல் 11-12  மணியும், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு மதியம் 12-1 மணியும் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதன்படி, அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர்  அன்பழகன் மற்றும் அதிகாரிகள் தயாராக இருந்தனர்.

சரியாக 11.30 மணியளவில், அதிமுக வேட்பாளர் தம்பிதுரை, அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் (சுகாதாரம்) மற்றும் கூட்டணி கட்சி  நிர்வாகிகள் வந்தனர். இவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் படலம் 30 நிமிடத்தை தாண்டியும் நடந்து கொண்டிருந்தது. சரியாக 12 மணியளவில்,  காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, முன்னாள் அமைச்சரும் தி.மு.க. மாவட்ட பொறுப்பாளருமான செந்தில்பாலாஜி உட்பட பலர் அலுவலகத்துக்கு  வந்தனர். அதிமுக வேட்பாளர் மனு தாக்கல் செய்வதாக கேள்விப்பட்டதும் ஒரு அறையில் காத்திருந்தனர். 20 நிமிடம் காத்திருந்தபிறகு தேர்தல்  நடத்தும் அலுவலர் அறையை நோக்கி வந்தனர். அப்போது போலீசார், அதிமுக மாற்று வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்து கொண்டிருக்கிறார்,  யாரும் உள்ளே போகக்கூடாது என தடுத்து நிறுத்தினர்.

இதற்கு ஜோதிமணி தரப்பினர், நாங்கள் வேட்பு மனுதாக்கல் செய்ய 12-ல் இருந்து 1 மணி வரை நேரம் வாங்கியுள்ளோம். எங்களுக்கான நேரத்தில்  அவர்கள் எப்படி மனுதாக்கல் செய்யலாம்’’ என்று கேள்வியெழுப்பினார். பின்னர் ஜோதிமணி, செந்தில்பாலாஜி ஆகியோர் எங்களுக்கு  ஒதுக்கப்பட்டநேரம்  வந்துவிட்டது எனக்கூறி உள்ளே செல்ல முயன்றனர்.  உடனே, அங்கிருந்த குளித்தலை  டி.எஸ்.பி. சுகுமார் உள்ளே போகக்கூடாது  எனக்கூறி செந்தில்பாலாஜியின் நெஞ்சில் கையை வைத்து தள்ளினார். இதனால் இவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  அங்கிருந்த கட்சி  நிர்வாகிகள் டி.எஸ்.பி.யை பார்த்து, `நேரம் கொடுத்துவிட்டு  உள்ளே விடமுடியாது என கூறுவதற்கு உங்களுக்கு என்ன அதிகாரம்  உள்ளது’ என்று  கேட்டார்கள். அதற்கு பதில் அளிக்க முடியாமல் டி.எஸ்.பி. அங்கிருந்து நைசாக சென்றுவிட்டார்.

இந்த காட்சிகளை பத்திரிக்கையாளர்கள் படம் பிடிக்க முயன்றபோது, போலீசார் உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால், இருதரப்புக்கும்  இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.  ஆத்திரமடைந்த பத்திரிக்கையாளர்களில் சிலர், கண்ணாடி தடுப்பு முன்பாக தரையில் அமர்ந்து தர்ணாவில்  ஈடுபட்டனர். இதனிடையே, 12.40 மணியளவில் அதிமுகவினர் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு வெளியேறினர். இதன்பிறகு, ஜோதிமணி சென்று  வேட்புமனு தாக்கல் செய்தார். போலீசாரின் சம்பவத்தால் கலெக்டர் அலுவலக வளாகமே பரபரப்பாக காணப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Karur ,brother ,woman candidate , Karur, Thambidurai, Congress Party candidate, Senthilpalaji, DSP
× RELATED அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற...