×

ராதாரவி மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த மு.க.ஸ்டாலினுக்கு நன்றி மற்றும் பாராட்டுகள்: நடிகை நயன்தாரா அறிக்கை

சென்னை: ராதாரவி மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தும், ராதாரவிக்கு கண்டனம் தெரிவித்தும் நடிகை நயன்தாரா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் ராதாரவி, நடிகைகள் குறித்த பேசிய கருத்து சர்ச்சைக்கு வழி வகுத்துள்ளது. நடிகர் ராதாரவி பேசுகையில், நடிகை நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார், சீதையாகவும் நடிக்கிறார் எனத் தொடங்கி மீ டு விவகாரம் குறித்து நடிகைகளை, நடிகர்கள் எங்கு வேண்டுமானாலும் தொட்டு கொள்ளலாம் என முன்னரே ஒப்பந்தம் போட்டுக் கொண்டால் பின்னர் பிரச்னைகள் வராது என பேசினார்.

நடிகர் ராதாரவியின் இந்தப் பேச்சுக்கு திரைத்துறையினர் பலரும், சமூகவலைதளங்களில் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர். இதையடுத்து நடிகர் ராதாரவி திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், இச்சம்பவம் குறித்து நடிகை நயன்தாரா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, பொதுவாக நான் விளக்க அறிக்கை எதுவும் வெளியிடுவதில்லை. என் வேலை என்னை முன்னிறுத்தும். முதலாவதாக திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு எனது நன்றி மற்றும் பாராட்டுகள். ராதாரவி அவர்களின் வெறுக்கும் வகையிலான பேச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததற்கு நன்றிகள். இவர் போன்ற ஆட்கள் மீதும் அவர்கள் குடும்பத்தில் வாழும் பெண்கள் மீதும் நான் மிகவும் பரிதாபப்படுகிறேன்.

என்னை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த ராதாரவியை விசாரிக்க குழு அமைக்க வேண்டும். மூத்த நடிகரான ராதாரவி, இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டுபவராக இருந்திருக்க வேண்டும். திரைப்படத்தில் வாய்ப்பு கிடைக்காமல் போனதால் இதுபோன்று கீழ்த்தரமாக பேசி பிரபலமடைகிறார். பெண்களை மிகவும் இழிவாக பேசுபவர்களை பற்றி மிகவும் வருந்துகிறேன். உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி விசாகா கமிட்டி அமைக்க நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்குமா? கடவுள் கொடுத்த வரத்தால் திரையுலகில் சிறப்பான இடம் கிடைத்துள்ளது. நீங்கள் எத்தனை எதிர் விமர்சனங்கள் சொன்னாலும் நான் மீண்டும் பேயாக, சீதாவாக, கடவுளாக, தோழியாக, மனைவியாக, காதலியாக என இன்னும் பல கதாபாத்திரங்களை என் ரசிகர்களுக்காக ஏற்று நடிக்கத்தான் போகிறேன் என்று கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : MK Stalin ,Radharavi: Actress Nayantara , Radharavi, MK Stalin, actress Nayanthara, reported
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...