×

தண்டையார்பேட்டை, ஆலந்தூரில் ஆவணமின்றி எடுத்துச் சென்ற 1.5 கோடி பறிமுதல்

பெரம்பூர்: தண்டையார்பேட்டை, ஆலந்தூரில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் 1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கவும், அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையின்போது முறையான ஆவணம் இல்லாத பணம், தங்கம், வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் இரவு தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஞானசந்திரன் தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை மடக்கி சோதனை நடத்தியபோது, கார் டிக்கிக்குள் 55 லட்சம் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. ஆனால், அதற்கு முறையான ஆவணமில்லை. காரில் வந்த டேவிட் மோகன், விஷ்ணு ஆகியோரிடம் விசாரித்தபோது, அவர்கள் தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வசூலான பணத்தை எடுத்து செல்வதாக தெரிவித்தனர்.

இருப்பினும் உரிய ஆவணம் இல்லாததால் சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் அந்த பணத்தை ஒப்படைத்தனர். மேலும் அதற்கான ஆவணங்களை காண்பித்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆலந்தூர்: தேர்தல் பறக்கும் படை அதிகாரி பாலசுப்பிரமணியம் தலைமையில் நேற்று ஆலந்தூர் மார்க்கெட் பகுதியில்  வாகன சோதனை நடத்தப்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் ஒரு இரும்பு பெட்டியில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரிந்தது. விசாரணையில், தனியார் வங்கி ஏ.டி.எம். மையங்களுக்கு பணம் போடுவதற்காக கொண்டு செல்வதாக காரில் இருந்த சீத்தாராமன், குமரன் ஆகியோர் தெரிவித்தனர். ஆனால் அதற்குரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் அந்த பணத்தை பறிமுதல் செய்து பரங்கிமலை போலீஸ் உதவியுடன் ஆலந்தூர் தொகுதி உதவி தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tondiarpet ,Alandur , 1.5 crore confiscated, Tondiarpet, Alandur
× RELATED தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி...