×

கவலைக்கிடமான கட்டுமானத் தொழில் கட்சி தொண்டர்களாக மாறிய தொழிலாளர்கள்: வாக்கு சேகரிப்பில் உற்சாகம்

சேலம், : கட்டுமான தொழில் மந்தமடைந்துள்ள நிலையில், இத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், கட்சித் தொண்டர்களாக மாறி  வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.  சமீப காலமாக கட்டுமானத்திற்கு தேவையான மணல், இரும்புக்கம்பி, செங்கல் உள்பட அனைத்து விதமான பொருட்களின் விலை அதிகரித்து  வருகிறது. இந்த வகையில் கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு பிறகு குவாரிகளில் மணல் அள்ள தடைவிதிக்கப்பட்டது. இதன் காரணமாக 8500க்கு விற்ற இரண்டரை யூனிட் மணல், படிப்படியாக விலை அதிகரித்து, தற்போது ஒரு யூனிட் மணல் 12 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது.

இதேபோல் கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் கூலியும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டாக வீடு  கட்டுவோரின் எண்ணிக்கை வேகமாக சரிந்துள்ளது. தற்போது 10 முதல் 20 சதவீத கட்டுமான பணி மட்டுமே நடக்கிறது. இத்தொழிலில் ஈடுபட்டுள்ள  தொழிலாளர்களுக்கு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே வேலை கிடைத்து வருகிறது. இதனால் தொழிலாளர்கள் போதிய வருமானம்  இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். சிலர் கட்டுமான தொழிலை விட்டுவிட்டு மாற்றுத்தொழிலுக்கு சென்றுவிட்டனர். இந்த நிலையில் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது. இதையொட்டி வேட்பாளர்கள் கடந்த 19ம் தேதி முதல் வேட்பு மனு  தாக்கல் செய்து வருகின்றனர்.

ஒரு சில வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரசாரத்தில் வேட்பாளர்களுடன் கட்சி நிர்வாகிகள்,  தொண்டர்கள் உடன் செல்கின்றனர். இந்த நிலையில் பிரசாரத்தில் கூட்டத்தை அதிகரித்து காட்ட, கட்சி நிர்வாகிகள் பார்வை கட்டுமான  தொழிலாளர்களின் பக்கம் திரும்பியுள்ளது. கட்டுமான தொழிலாளர்களை வைத்து பிரசாரம் செய்து வருகின்றனர். இவர்கள் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை தேர்தல் பிரசாரத்தில்  ஈடுபடுகின்றனர். காலை டிபன், மதியம் சாப்பாடு உள்பட 150 முதல்  250 வரை வழங்கப்படுகிறது. இதன் காரணமாக பெரும்பாலான கட்டுமான  தொழிலாளர்கள் தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். கட்டுமான தொழிலில் போதிய வருமானம் இல்லாமல் தவித்து வந்த கட்டுமான  தொழிலாளர்களுக்கு, தேர்தல் பிரசாரம் மூலம் வருமானம் கிடைத்து வருவதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : construction industry party volunteers , Construction Industry Party, enthusiasm
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் மயங்கி விழுந்து 2 பேர் பலி: சேலத்தில் சோகம்