கலக்கத்தில் டிஎஸ்பி.., இன்ஸ்.,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இவ்வழக்கை, தற்போது சிபிசிஐடி போலீசார்  விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கின், பிரதான குற்றவாளி திருநாவுக்கரசுவை நான்கு நாள் கஸ்டடி எடுத்து விசாரித்தபோது, அவர் பல்வேறு  திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். இந்த வழக்கை உள்ளூர் போலீசார் விசாரிக்கும்போது யார், யாருக்கு எவ்வளவு மாமூல் கொடுத்தோம் என்ற  பட்டியலை அவர் வெளியிட்டுள்ளார். அத்துடன், ‘’நீ ஓடுகிற மாதிரி ஓடு.... நாங்கள் புடிக்கிற மாதிரி புடிக்கிறோம்...’’ என இரு அதிகாரிகள் ஐடியா  கொடுத்து, எஸ்கேப் ஆக வைத்துள்ளனர்.

Advertising
Advertising

அவர்கள், எவ்வளவு தொகை வாங்கிக்கொண்டு இந்த ஐடியா கொடுத்தார்கள் என்ற விவரத்தையும்  திருநாவுக்கரசு தனது வாக்குமூலத்தில் பதிவுசெய்துள்ளார். இது, உளவுப்பிரிவு மூலமாக அந்த அதிகாரிகள் காதுக்கு போய்விட்டது. அதனால், டிஎஸ்பி..,  இன்ஸ்., என இரு அதிகாரிகளும் கடும் கலக்கத்தில் உள்ளனர். தற்போது, தேர்தல் பாதுகாப்பு பணி உச்சத்தில் இருப்பதால் இப்போது கை வைக்க  வேண்டாம், தேர்தல் முடிந்த பிறகு இருவருக்கும் ஆப்பு வைக்கலாம் என சிபிசிஐடி போலீசார் காய் நகர்த்தி வருகின்றனர்.

மணல் கடத்தும் எஸ்ஐ, தனிப்பிரிவு போலீசார்

மாநில எல்லையில் இருந்தாலே போலீசுக்கு அதிர்ஷ்டம்தான் போலும். வேலூர் மாவட்டத்தில் ஆந்திர எல்லையோரத்தில் அமைந்த பேரணாம்பட்டு  நகரின் போலீஸ் நிலையத்தில் சிலம்பான பெயர் கொண்ட பயிற்சி எஸ்ஐ பணிபுரிந்து வருகிறார். இவர் முன்பு ஜோலார்பேட்டையில்  பணியாற்றியபோது உள்ளூர் அமைச்சரான வீரமானவர்  சொன்ன வேலையை ஒழுங்காக செய்யாததால் பேரணாம்பட்டுக்கு தூக்கியடிக்கப்பட்டதாக  கூறப்பட்டது.  இங்கு இவர் பேரணாம்பட்டில் சிங்கம் பட டயலாக்கை பேசிக் கொண்டே, இவரிடம் வரும் புகார்தாரர்கள், மனுவில் புகாருக்கு உள்ளானவர் என  இருவரில் பணபலம் யாருக்கு அதிகம் உள்ளது என்பதை அறிந்து அதிகம் இருப்பவர்களிடம் நேரடியாகவே  பேரம் பேசுவாராம். தற்போது  பேரணாம்பட்டுக்கு புதிதாக வந்த இன்ஸ்க்கு ஒன்றும் தெரியாது.

மற்றவர்கள் பழைய ஆட்கள். எனவே, நான்தான் இங்கு எல்லாமே என்று சிலம்பான  பெயர் கொண்ட எஸ்ஐ ஆனவர் சுற்றி வருகிறாராம். சமீபத்தில் இங்குள்ள போலீசார் அனைவரும் மோடி சென்னை வருகைக்காக சென்னைக்கு  சென்றனர். அப்போது சிலம்பான பெயர் கொண்ட பயிற்சி எஸ்ஐ,  தனிப்பிரிவு காவலரான செல்லமான பெயர் கொண்ட ராஜியும் சேர்ந்துக் கொண்டு  அந்த 2 நாள் இரவும் பேரணாம்பட்டு அடுத்த குண்டலப்பல்லி கிராமத்தில் மணல் மாபியாவிடம் சென்று பல ஆயிரங்களை மாமூலாக பெற்றுக்  கொண்டதுடன், உயர்ரக சரக்கு பாட்டில்களையும் வாங்கிக் கொண்டு, ‘நீ தைரியமாக மணலை ஓட்டு, இங்கு நாங்கதான் ராஜா.

எவன் கேட்கிறான்னு பார்க்கிறேன். அந்த இன்ஸ்சு தற்காலிகம்தான். நாங்கதான் நிரந்தரம்’ என்று தைரியம் கூறி  ஆற்றில் மணலை அள்ளிக் கொள்ள  சொன்னார்களாம். இதனால் அங்குள்ள பிற மணல் மாபியாக்கள் டென்ஷன் ஆனார்களாம். இதுதவிர மேற்கண்ட 2 பேருடன் ரைட்டர், பிரசாதமான பெயர் கொண்டவர் என அனைவரும் கூட்டு சேர்ந்து ஆளாளுக்கு சாராயம், மணல் கடத்தல்,  காட்டன் சூதாட்டம், கிளப்  என ஒவ்வொரு பிரிவிலும் பணத்தை அள்ளி வருகிறார்களாம்.

‘பாஸ்’ இருக்க பயமேன்?

சிவகங்கை மாவட்டத்தில் எஸ்பியாக கடந்த 2016ல் ஜெயச்சந்திரன் பொறுப்பேற்றார். மக்களவை தேர்தலுக்காக பல்வேறு துறைகளில் அலுவலர்கள்  இடமாற்றம் செய்யப்பட்டனர். காவல் துறையில் எஸ்ஐக்கள் கூட சொந்த மாவட்டத்தில் இருக்கக்கூடாது என வெவ்வேறு மாவட்டங்களுக்கு  இடமாற்றம் செய்யப்பட்டனர். இதுபோல் இன்ஸ்பெக்டர்கள் சில மாதங்கள் மட்டுமே பணிபுரிந்திருந்தாலும், பணிபுரியும் மாவட்டத்தில் இருந்து  கட்டாயப்படுத்தி வேறு மாவட்டங்களுக்கு மாற்றினர்.

ஆனால் சிவகங்கை எஸ்பி பொறுப்பேற்று 3 ஆண்டுகளை நெருங்கியும் இதுவரை இடமாற்றம் செய்யப்படவில்லை.

ஏற்கனவே கச்சநத்தம் படுகொலை  உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்ட நேரத்திலும் எஸ்பி இடமாற்றம் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போலீசார்  அளவிலேயே நடவடிக்கை இருந்தது. தேர்தலையொட்டி 3 மாதங்களுக்குள் போலீசார் மாற்றப்பட்ட நிலையில், எஸ்பியை மாற்றாததற்கு லோக்கல்  ‘பாஸ்’ அமைச்சர்தான் காரணம் என்கின்றனர். அமைச்சர் உள்ளிட்ட ஆளும்தரப்பினருக்கு சாதகமாக இவர் செயல்படுவதால், சிவகங்கை  மாவட்டத்தில் எஸ்பியாக நீடிக்கிறார். தேர்தலுக்கு பிறகும் இவரே நிலைப்பார் என்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: