×

பாஜ பட்டியல் வெளியீடு பூரி, வதோராவில் மோடி போட்டியில்லை

புதுடெல்லி: பிரதமர் மோடி 2வது தொகுதியில் போட்டியிடுவார் என்ற ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. பாஜ 2வது  கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று அதிகாலை வெளியிட்டது. இதில் 2வது தொகுதியாக பூரியில் பிரதமர் மோடி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அத்தொகுதியில் பாஜ செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் நேற்றிரவு வெளியான 4வது பட்டியலில் வதோதரா தொகுதியில் தற்போதைய எம்.பி. ரஞ்சன் பென் பாஹ்ட்டுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால், மோடி 2வது தொகுதியில் போட்டியிடுவார் என்ற ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 2வது கட்ட பட்டியலில், மகாராஷ்டிராவில் 6, ஒடிசாவில் 5, அசாம், மேகாலயாவில் தலா ஒரு மக்களவை வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர். இது தவிர ஏப்ரல் 11ம் தேதி மக்களவைத் தேர்தலோடு சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கும் ஒடிசாவில், 22 பேரவை வேட்பாளர்களையும் பாஜ அறிவித்தது. அதேபோன்று, பீகாரில் மொத்தம் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் 39 தொகுதிகளில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் பட்டியலை, மாநில பாஜக பொறுப்பாளர் பூபேந்திர யாதவ் நேற்று அறிவித்தார். இதில் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் போட்டியிடும் நவடா தொகுதி, கூட்டணி கட்சியான லோக் ஜன சக்திக்கு ஒதுக்கப்பட்டதால், இம்முறை அவர் பெகுசராய் தொகுதியில் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் சேர்ந்த மற்ற மத்திய அமைச்சரவை சகாக்கள் ராதா மோகன் சிங், ஆர்.கே. சிங், அஷ்வனி குமார் சவுபே, ராம் கிரிபால் யாதவ் ஆகியோர் முறையே மோதிஹரி, அரா, பக்சார், பாடலிபுத்ரா தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வானுக்கு இம்முறை மாநிலங்களவை சீட்டுக்கு மாறுவதால் அவரது தம்பிக்கு பராஸ் ஹஜிபூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இன்று காங்.கில் சத்ருகன் ஐக்கியம்?

பாட்னா சாகிப் தொகுதியில் பாஜ சார்பில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்  போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தொகுதியில் பாஜ சார்பில்  ஏற்கனவே வெற்றி பெற்ற நடிகர் சத்ருகன் சின்காவுக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் சின்கா இன்று காங்கிரஸ் கட்சியில் இணைவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து அவர் இதே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவார் என தெரிகிறது.

ஒரே நாளில் 3 பட்டியல்


பாஜ நேற்று மட்டும் 3 வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. ஏற்கனவே முதல் பட்டியலில் 184 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று அதிகாலை 64 வேட்பாளர்கள் கொண்ட 2வது பட்டியலை வெளியிட்டது. அடுத்ததாக மாலையில் 14 வேட்பாளர்களை கொண்ட 3வது பட்டியலையும், இரவு 8 மணி அளவில் 48 வேட்பாளர்கள் கொண்ட 4 பட்டியலையும் வெளியிட்டது. இதில் கேரளா, குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, இமாச்சல் உள்ளிட்ட மாநிலங்களின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர கோவா மற்றும் குஜராத்தில் இடைத்தேர்தல் நடக்கும் தலா 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான ேவட்பாளர்களையும் பாஜ அறிவித்தது. மேலும், இத்தேர்தல் சீட் ஒதுக்கப்படாத உமா பாரதிக்கு, கட்சியின் துணைத் தலைவர் பதவி வழங்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : BJP ,Puri ,Modi , BJP list release Puri, Modi, contest in Vadra
× RELATED பழங்குடியின பெண்ணை குடியரசுத்...