×

மேற்குவங்கத்தில் மம்தா தனிநபர் ராஜ்ஜியம் : முதல் முறையாக ராகுல் கடும் தாக்கு

சன்சல்: ‘‘மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி, தனது இஷ்டப்படி ஆட்சி, தனி ராஜ்ஜியம் நடத்துகிறார்’’ என தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் கடுமையாக தாக்கி பேசினார். மேற்குவங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் உள்ள சன்சால் என்ற இடத்தில் நேற்று தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட ராகுல் பேசியதாவது: மேற்கு வங்கத்தில் ஒரு நபர் ஆட்சி நடக்கிறது. தனது இஷ்டப்படி மம்தா பானர்ஜி ஆட்சி நடத்துகிறார். அவர் யாருடனும் பேசுவதில்லை, யாருடைய ஆலோசனையும் கேட்பதில்லை. மேற்கு வங்கத்தில் யாருக்காவது அதிகாரம் உள்ளதா? மேற்கு வங்கத்துக்கு சொந்த குரல் இருப்பது முக்கியம் இல்லையா? ஒரு தனி நபர் மாநிலம் முழுவதும் ஆட்சி செய்ய அனுமதிக்கலாமா? மேற்குவங்க மக்களுக்காக மம்தா எதுவும் செய்யவில்லை. விவசாயிகள், இளைஞர்களுக்கு எதுவும் செய்யப்படவில்லை. எங்கு பார்த்தாலும் வேலை வாய்ப்பு இல்லை. நாள் முழுவதும் மம்தாதான் பேசுகிறார். அவர் உங்களுக்கு என்ன செய்தார் என கூறுங்கள்?

விவசாயிகளுக்கு வரி சலுகை வழங்கினாரா? இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்தாரா? சிறு தொழிலதிபர்களுக்கு உதவினாரா? இங்கு காங்கிரஸ் தொண்டர்கள், திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களால் தினந்தோறும் தாக்கப்படுகின்றனர். அரசியல் கொள்கைக்காக இங்கு போராடும் காங்கிரஸ் தொண்டர்கள் ஒவ்வொருவரையும் நான் பாராட்ட விரும்புகிறேன். காங்கிரஸ் கொள்கைக்காக நீங்கள் தொடர்ந்து போராடுங்கள். பயப்பட வேண்டாம். நான் உங்களுடன் இருக்கிறேன். மத்தியில் நாம் ஆட்சி அமைப்போம். பின்னர் இங்கு என்ன நடக்கிறது என நீங்கள் பார்ப்பீர்கள்.மேற்கு வங்கத்தில் நிலைமை மாறவில்லை. மார்க்சிஸ்ட் ஆட்சியில் நடந்த அராஜகங்கள், மம்தா ஆட்சியிலும் தொடர்கிறது. இங்கு காங்கிரஸ் ஆட்சி அமைக்க நாம் முயற்சிப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.

வசதியானவர்கள் பணத்தை பாதுகாக்கும் ‘காவலாளி’ மோடி

பிரசாரத்தில் பேசிய ராகுல் கூறியதாவது: சாதாரண மக்களின் வீட்டில் காவலாளி நியமிக்கப்படுவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? பணக்காரர்களின் பணத்தை பாதுகாக்கும் காவலாளிதான் பிரதமர் மோடி. அனில் அம்பானி, நீரவ் மோடி, மெகுல் சோக்‌ஷி போன்றவர்களை பிரதமர் மோடி சகோதரர் என்கிறார். பொது மக்களை நண்பர்கள் என்கிறார். ஏழைகளின் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்துவேன், 2 கோடி வேலை வாய்ப்பை உருவாக்குவேன், விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வேன் என மோடி உறுதி அளித்தார். இதை நிறைவேற்ற தவறியது ஏன்? என அவர் எப்போதாவது கூறினாரா? விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் நலனுக்காக அவர் ஏதாவது நன்மை செய்தாரா? என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mamata ,kingdom ,West Bengal ,Rahul , Mamata , individual kingdom,West Bengal
× RELATED பாஜதான் ஊழல் கட்சி: பிரதமர் மோடிக்கு மம்தா பதிலடி