வழக்கில் இருந்து தன்னை காப்பாற்ற அதிமுகவை பாஜவிடம் அடகு வைத்துவிட்டார் : எடப்பாடி பழனிசாமி மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

சேலம்: வழக்கில் இருந்து தன்னை காப்பாற்ற, அதிமுகவை பாரதிய ஜனதாவிடம் அடகு வைத்துவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், தர்மபுரி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் செந்தில்குமார், பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதி வேட்பாளர் வக்கீல் மணி, அரூர் சட்டசபை தொகுதி வேட்பாளர் கிருஷ்ணகுமார் ஆகியோருக்கு வாக்கு சேகரித்து அரூர் கூட்டுரோட்டில் நடந்த பொதுக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

மத்தியில் நாம் விரும்பும் ஆட்சி அமைந்தால், என்னென்ன திட்டங்களை செயல்படுத்துவோம் என்பது குறித்து உறுதிமொழி கொடுத்து அதை புத்தகமாகவும் வெளியிட்டுள்ளோம். அதேநேரத்தில் மற்றொரு அணியும் தேர்தல் பிரசாரத்தை நடத்திக்கொண்டிருக்கிறது. நாம் நடத்தும் கூட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் திரள்கின்றனர். ஆனால் முதல்வர் எடப்பாடி யாரும் இல்லாத தெருவில் தனியாக போய் ஓட்டு கேட்டுக்கொண்டிருக்கிறார். சேலத்தில் நேற்று எம்.ஜி.ஆர் ,ெஜயலலிதா பற்றி எடப்பாடி உருக்கமாக பேசி இருக்கிறார். அவர்கள் விட்டுச்சென்ற ஆட்சியையும், கட்சியையும் பத்திரமாக பாதுகாப்பதாக கூறியிருக்கிறார். எம்ஜிஆர், ஜெயலலிதா பற்றி ேபச, எந்த அருகதையும் அவருக்கு இல்லை. அதிமுகவை மோடியிடமும், அமித்ஷாவிடமும் அடகு வைத்து விட்டார். ஒரு கொலை வழக்கில் இருந்து அவரை காப்பாற்றிக்கொள்ளவே, கெஞ்சி கூத்தாடி அமித்ஷாவிடம் கட்சியை அடகு வைத்துள்ளார்.

அதுமட்டுமல்ல, ஜெயலலிதாவை திட்டித்தீர்த்து புத்தகம் வெளியிட்டவர்  ராமதாஸ். அவரோடு கூட்டு வைத்துள்ளவர், எப்படி ஜெயலலிதா வழியில் நடக்க முடியும். கடந்த மக்களவை தேர்தலில் மோடியா? லேடியா? என்று கேட்டவர் ஜெயலலிதா. அந்த மோடியுடன் கூட்டணி வைத்துவிட்டு, இந்தியாவே திரும்பி பார்க்கும் கூட்டணி என்கிறார்கள். மத்தியிலும், மாநிலத்திலும் ஒருமித்த கருத்துள்ள கட்சிகள் ஆட்சி அமைத்தால்தான் மாநிலம் வளர்ச்சி பெறும் என்கிறார். தற்போதும் இவர்கள் கூட்டணியில்தான் இருக்கிறார்கள். ஆனால் தமிழகம் என்ன வளர்ச்சியை கண்டுள்ளது? அதே நேரத்தில் திமுக ஆட்சியில் என்ன செய்தோம் என்றும் கேட்கிறார். நாங்கள் என்ன செய்யவில்லை? உதாரணமாக, சில மாதங்களுக்கு முன்பு மெட்ரோ ரயில் திட்டம் சென்னையில் வந்தது. அது கருணாநிதி முதல்வராக இருந்தபோது 70 சதவீதம் வரை பணிகள் முடிக்கப்பட்டு, ஜப்பான் வரை நான் சென்று கொண்டு வந்த திட்டம். இந்த மெட்ரோ ரயில் திட்டம் வேஸ்ட் என்றும், மோனோ ரயில் திட்டம் கொண்டு வருவோம் என்றும் ஜெயலலிதா கூறினார். ஆனால் அவர்கள் தான் இப்போது மெட்ரோ ரயில் திட்டத்தை, தாங்களே கொண்டு வந்ததாக கூறுகிறார்கள். அதேபோல் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் குடிநீர் பிரச்னையை தீர்க்க 1550 கோடி மதிப்பில், ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வந்ததும் நாங்கள் தான். அதேபோல் சேலம் ரயில்வே கோட்டம், தங்க நாற்கர சாலை என்று அனைத்தும் கொண்டு வந்தது நாங்கள் தான். இவை உதாரணங்கள் மட்டுமே.

இதேபோல் எந்த திட்டத்தையாவது மத்திய அரசின் உதவியோடு, அதிமுக கொண்டு வந்ததாக கூற முடியுமா? கஜா பாதிப்புக்கு நிவாரணம் பெற முடிந்ததா? பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய முடிந்ததா? ஏழை எளிய மாணவர்களிள் மருத்துவ படிப்புக்கு உலை வைக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய முடிந்ததா? மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க முடிந்ததா? பிறகு எதற்கு பாஜகவுடன் கூட்டணி? தமிழகத்தில் மக்கள் முகம் சுழிக்காத ஆட்சி நடப்பதாக ராமதாஸ் சொல்கிறார். ஆனால் அவர் பேசிய பேச்சுகளை பார்த்து மக்கள் முகம் சுழிக்கிறார்கள். பணம் ெகாடுத்து முதல்வர் பதவியை குத்தகைக்கு எடுத்தவர் எடப்பாடி என்று சொன்ன ராமதாஸ், தற்போது அவரை புகழும் புலவராக மாறியுள்ளார். கம்பீரமாக, துடிப்பாக, வேகமாக, மலர்ச்சியாக வலம் வந்து கொண்டிருந்த அன்புமணி முகம் வாடிப்போய், டயர் நக்கி என்று சொன்னவருடன் ஒட்டி நின்று ஓட்டு கேட்கிறார். அவருக்கு தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என்பது முகத்தை பார்க்கும் போதே தெரிகிறது. வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கு நாட்கள் உள்ளது. எனவே அன்புமணி வாபஸ் வாங்கி விட்டால் கொஞ்சம் மரியாதையாக இருக்கும். பாமக கொடுத்துள்ள 10 அம்ச கோரிக்கையில் ேசலம்-சென்னை 8 வழிச்சாலை வேண்டாம் என்று கூறாதது ஏன்? 20 சதவீத இடஒதுக்கீடு கேட்டு போராடிய வன்னிய மக்களை சுட்டுத்தள்ளியது அதிமுக ஆட்சி. அந்த மக்களை இழிவுபடுத்தும் வகையில் ராமதாஸ் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளார். அவர் சுயநலவாதி என்பதை நான் சொல்லவில்லை. காடுவெட்டி குருவின் குடும்பம் சொல்கிறது. எனவே இதற்கெல்லாம் முடிவு கட்டும் வகையில் வரும் தேர்தலில் நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: