×

பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை ஆக்கிரமிப்பு அகற்றாத விவகாரம்.... அவமதிப்பு வழக்கில் மாநகராட்சி துணை ஆணையர் ஆஜராக வேண்டும் : ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 6வது மண்டல துணை ஆணையர் ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செம்பியம் திருவிக நகரை சேர்ந்த எல்.டி.வில்லியம் மோசஸ், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “ பெரம்பூர் மாதா கோயில் அருகிலிருந்து தொடங்கும் பேப்பர் மில்ஸ் சாலை ரெட்டை ஏரி வரை செல்கிறது. இந்த சாலையில் வீனஸ், பெரவள்ளூர், ஜவஹர் நகர்,  பெரியார் நகர், கொளத்தூர் ஆகிய முக்கிய பகுதிகள் உள்ளன. சாலையில் சுமார் 10க்கும் மேற்பட்ட பள்ளிகளும், ஏராளமான வழிபாட்டு தலங்களும் உள்ளன. தினமும் 3 லட்சம் வாகனங்கள் இந்த சாலையில் செல்கின்றன. ஆனால், பாதசாரிகள் கூட செல்ல முடியாத அளவில் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. 1986ல் சாலையை 70 அடி சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டது. இதுவரை சாலை  விரிவாக்கம் செய்யப்படவில்லை. தற்போது, சாலை 40 அடிக்கும் குறைவாக உள்ளதால் இருபக்கமும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் இச்சாலையை விரிவாக்கம் செய்யுமாறு சென்னை மாநகராட்சிக்கும்,  மாவட்ட கலெக்டருக்கும் உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அடங்கிய டிவிஷன் பெஞ்ச், ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு 2012ல் உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை சென்னை மாநகராட்சி அமல்படுத்தவில்லை. இதையடுத்து, சென்னை மாநகராட்சி ஆணையர் மீது வில்லியம் மோசஸ் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அடங்கிய டிவிஷன் பெஞ்ச், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு, உயர் நீதிமன்ற உத்தரவின்  அடிப்படையில், ஆக்கிரமிப்புகளை அகற்றிய நடவடிக்கையை புகைப்பட ஆதாரங்களுடன் அறிக்கையாக 2 வாரத்திற்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்  என்று சென்னை கலெக்டர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் ஆகியோருக்கு உத்தரவிட்டனர். ஆனால், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் கடந்த வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் டி.எஸ்.ராஜமோகன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள சாலை மிகவும் நெருக்கடி நிறைந்ததாக உள்ளது. எனவே, சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்த புகைப்படங்கள் உள்ளிட்ட ஆவணங்களுடன் வரும் ஏப்ரல் 25ம் தேதிக்குள் 6வது மண்டல துணை கமிஷனர் நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Perambur Paper Mills Road Agreement Removal ,Court ,Deputy Commissioner , Perambur Paper Mills Road ,Agreement Removal
× RELATED சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பணி...