×

செக் திரும்பிய விவகாரத்தில் முதியவரிடம் அபராதம் வசூல் அதிகாரிகளுக்கு இதயம் இல்லையா? மின்வாரியத்துக்கு ஐகோர்ட் கண்டனம்

சென்னை: மின் கட்டணத்திற்கான செக் வழங்கிய விஷயத்தில் வங்கி செய்த தவறுக்கு முதியவரிடம் அபராதம் வசூலித்த மின்வாரியத்திற்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பெரம்பூர் பெரியார் நகரைச் சேர்ந்தவர் ஓ.மங்களவிநாயகம் (84). தமிழக உள்துறையில் துணைச் செயலாளராக பணியாற்றியவர். இவரது வீட்டுக்கு 2 மின் இணைப்புகள் உள்ளன. இந்த இணைப்புகளுக்கான மின் கட்டணத்தை காசோலை மூலம் செலுத்தி வந்தார். கடந்த 2008 ஏப்ரல் 3ம் தேதி தனது வீட்டு மின் கட்டணத்திற்கான காசோலையை மின் அலுவலகத்தில் கொடுத்துள்ளார். ஆனால், அவரது வங்கிக் கணக்கு முடித்துவைக்கப்பட்டுள்ளது என்று கூறி அவரது காசோலை திரும்ப வந்துவிட்டது. இதையடுத்து உடனடியாக அவர் தான் கணக்கு வைத்துள்ள ஜவஹர் நகர் ஸ்டேட் பேங்கிற்கு சென்று விசாரித்தார். வங்கி அதிகாரிகள், தவறுதலாக காசோலை திரும்ப அனுப்பப்பட்டுள்ளது என்று மங்களவிநாயகத்திடம் தெரிவித்தனர். இந்த தகவலை மின்வாரிய உதவிப் பொறியாளருக்கும் வங்கித் தரப்பு தெரிவித்தது. காசோலை திரும்பிவிட்டதால் 600 அபராதம் செலுத்த வேண்டும் என்று மின்வாரியம் மங்களவிநாயகத்திடம் கூறியது. மேலும், மீண்டும் காசோலை மூலம் மின்கட்டணம் செலுத்த வேண்டுமானால் 1000 கூடுதல் தரவேண்டும் என்று மின்வாரியம் தெரிவித்தது. உடனடியாக அந்த பணத்தை மங்களவிநாயகம் செலுத்திவிட்டார். இந்நிலையில், தன்னிடம் அபராதம் வாங்கியதை ரத்து செய்யக்கோரி மங்களவிநாயகம் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு கடிதம் எழுதினார். ஆனால் மங்களவிநாயகம் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மின்சார வாரியம் அவருக்கு கடிதம் அனுப்பியது.

இதைத்தொடர்ந்து, மங்களவிநாயகம் தனக்கு காசோலை மூலம் மின் கட்டணத்தை செலுத்த அனுமதி வழங்குமாறு தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஆர்.ரவி ஆஜராகி வாதிடும்போது வங்கி செய்த தவறுக்கு மனுதாரருக்கு எப்படி அபராதம் விதிக்க முடியும் என்றார். வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு: மனுதாரரின் வங்கிக் கணக்கு முடிக்கப்பட்டுள்ளது என்று தவறுதலாக வங்கித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது வங்கிக் கணக்கு தொடர்ந்து செயல்பாட்டில் உள்ளது என்று தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ஜவஹர் நகர் ஸ்டேட் வங்கியின் மேலாளர் கடிதம் எழுதியுள்ளார். ஆனால், அந்த கடிதத்தின் உள் அர்த்தம் துரதிஷ்டமாக மின்வாரியத்திற்கு புரியவில்லை. மனுதாரர் கொடுத்த செக்கில் எந்த தவறும் இல்லை. நடந்த தவறுக்கு வங்கியும் வருத்தம் தெரிவித்துள்ளது.

ஆனால், மின்சார வாரியம் இதை ஏற்கவில்லை. இதுபோன்ற விஷயங்களைக் கையாளும்போது  அதிகாரத்தை தவறான விதத்தில் பிரயோகிக்கக்கூடாது. செக் திரும்ப வந்துவிட்டதால் மனுதாரர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கும் வகையில் மின்சார வாரியம் கடிதம் எழுதியுள்ளது. இந்த விஷயத்தில் மின்சார வாரியம் இதயமில்லாமல் செயல்பட்டுள்ளது. மூத்த குடிமகனின் வாழ்வில் மின்சார வாரியம் இதுபோன்ற நடவடிக்கையை எடுத்திருக்கக்கூடாது. மனுதாரர் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதில் மின்சார வாரியம் தவறு செய்துள்ளது. எனவே, மனுதாரரிடம் வசூலித்த அபராதத்தொகை 1000த்தை 4 வாரங்களுக்குள் தமிழ்நாடு மின்சார வாரியம் தரவேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Judge ,Czech , penalty grievance, old man , Czech issue?
× RELATED பட்டா விஷயத்தில் நீதிமன்ற அவமதிப்பு...