×

கண்ணப்பன் திமுகவுக்கு ஆதரவு எதிரொலி செல்லாக்காசாகும் கோகுல இந்திரா: தொண்டர்கள் அதிருப்தி

முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் திமுக ஆதரவு தெரிவித்துள்ளார். இதனால் அதிமுகவில் கோகுல இந்திராவுக்கு செல்வாக்கு இல்லாமல்  போய்விட்டதாக அதிமுக தொண்டர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறும் மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் பாமக, பாஜ, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து  போட்டியிடுகிறது. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 20 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. மீதமுள்ள 20 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு  பங்கீட்டு கொடுத்துள்ளது. அதிமுக போட்டியிடும் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் வெளியிடப்பட்டு, மனு தாக்கலும் செய்துள்ளனர். இந்த நிலையில், முன்னாள்  அமைச்சர் கண்ணப்பன் அதிமுகவில் இருந்து விலகி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

 இது அதிமுக தலைமையை  கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கண்ணப்பன் இருந்த இடத்தில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவை வைத்து சமாளித்து விடலாம் என்று அதிமுக தலைமை கருதியது. காரணம்,  கண்ணப்பனும், கோகுலஇந்திராவும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதுதான். அதனால், கோகுல இந்திராவிடம் கட்சி தலைமை, தமிழகம் முழுவதும்  உள்ள அவரது சமுதாயத்தை சேர்ந்த கட்சி மற்றும் அமைப்புகளை ஒருங்கிணைத்து அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க ஏற்பாடு செய்யும்படி கேட்டுக்  கொண்டது. அதன்படி, கோகுல இந்திராவும் தமிழகம் முழுவதும் உள்ள கோகுல மக்கள் சார்ந்த கட்சி மற்றும் இயக்க தலைவர்களை கடந்த வாரம் சென்னைக்கு  அழைத்து முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்தார்.

அப்படி சந்திக்க ஏற்பாடு செய்யும்முன், அந்த தலைவர்களிடம் `கோகுல இந்திரா சொன்னால் நாங்கள்  அதிமுகவுக்கு ஆதரவு அளிப்போம் என்று முதல்வரிடம் கூற வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார். அப்படி சொன்னால் தேர்தல் பிரசாரம் மற்றும்  கட்சி வளர்ச்சிக்கான நிதி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருவதாகவும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அதன்படி பல கட்சியினர்,  சங்கத்தினர் சென்னை வந்து முதல்வரை சந்தித்து அதிமுகவுக்கு ஆதரவு அளித்தனர். ஆனால் அதிமுகவுக்கு ஆதரவு அளித்தும் கடந்த ஒரு வாரமாக அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் செயல் வீரர்கள் கூட்டம், பொதுக்கூட்டத்தில்  கோகுல இந்திராவுக்கு ஆதரவு தெரிவித்த எந்த கட்சியும் கலந்து கொள்ளவில்லை.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, கோகுல இந்திரா கூறியபடி எங்களுக்கு தேர்தல் பிரசாரத்துக்கான எந்த வசதியும் செய்து தரவில்லை. அவர்  உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் யாரும் எங்களிடம் தொடர்பு கொண்டு பேசவில்லை. உறுதிமொழி அளித்தபடி எங்களுக்கு தேவையான வசதிகளை  செய்து கொடுத்தால் மட்டுமே அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரம் செய்வோம்” என்று கூறினர். இதன்மூலம் கோகுல இந்திராவுக்கு செல்வாக்கு  இல்லை என்று அதிமுக தொண்டர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Volunteers , Kannappan, DMK, Gokula Indira, volunteers
× RELATED அண்டாவை தூக்கிச் சென்ற பறக்கும்படை; பிரியாணி போச்சே தொண்டர்கள் புலம்பல்