அது அந்தக்காலம்: ஒரு தொகுதிக்கு இரண்டு எம்.பி.

ஒரு நாடாளுமன்ற தொகுதியில் இருந்து எத்தனை உறுப்பினர்கள்(எம்பி) தேர்ந்தெடுக்கப்படுவர்? என்று பள்ளிகூடத்தில் கூட யாரும் கேள்வி  கேட்டதில்லை. ஏனென்றால் எல்லோருக்கும் பதில் தெரியும். ஒரு தொகுதியில் இருந்து ஒரு எம்பிதான் தேர்வு செய்யப்படுகிறார். ஆனால் முதல் 2  பொதுத் தேர்தல்களில் சில தொகுதிகளில் இருந்து தலா 2 எம்பிகள் தேர்ந்தெடுககப்பட்ட அதிசயம் நடந்தது. அந்த அதிசயத்துக்கு பின்னால் ஒரு போராட்ட வரலாறு இருக்கிறது. இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள் ‘நீங்களும் ஆட்சியில் பங்கேற்கலாம்’  என்று 1919ம் ஆண்டு அனுமதி தந்தனர். கொஞ்சம் பேர் தேர்தலை சந்திக்க, மிச்சம் ஆங்கிலேய அரசின் நியமன உறுப்பினர்கள்.

தேர்தல் மூலம்  தாழ்த்தப்பட்டவர்கள் தேர்வு செய்யப்படும் வாய்ப்பு மிகமிக அரிதாக இருந்தது.அப்போது நீதிகட்சி வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் வேண்டும் என்று  வலியுறுத்தி வந்தது. இந்திய அரசியல் வரலாற்றில்  டாக்டர்.அம்பேத்கர் வருகைக்கு பிறகு இந்த கோரிக்கை தீவிரமானது.  கோரிக்கையில் நியாயம்  இருந்ததால்  இஸ்லாமியர்கள், சீக்கியர்களுக்கு தரப்பட்ட இரட்டை வாக்குரிமை தாழ்த்தப்பட்ட மக்களுக்கும்  நீட்டிக்கப்பட்டது.  நாடு விடுதலை  அடைந்த பிறகு தனித்தொகுதிகளாகவும், சில தொகுதிகள் இரட்டை உறுப்பினர் தொகுதிகளாகவும் இருந்தன.  இங்கு பொது வேட்பாளர்களில் இருந்து ஒருவரும்,  தாழ்த்தப்பட்ட வேட்பாளர்களில் இருந்து ஒருவரும் எம்பிகளாக தேர்வு செய்யப்படுவர்.

அந்த தொகுதி வாக்காளர்களுக்கு மட்டும் 2 வாக்குகள். பொதுப்பிரிவு, தாழ்த்தப்பட்ட வேட்பாளர்களுக்கு தனித்தனியாக வாக்குப்பெட்டிகள்  வைக்கப்பட்டிருக்கும். இப்படி இரட்டை வாக்குரிமை அடிப்படையில் 1951-52(பல கட்டமாக, பல மாதங்கள் தேர்தல் நடந்தது), 1957 என முதல் 2 பொதுத்  தேர்தல்களில் மட்டும் தேர்தல்கள் நடத்தப்பட்டன.

தமிழகத்தில் வேலூர், மயிலாடுதுறை, திண்டிவனம்,  நாகப்பட்டினம், சிதம்பரம் ஆகிய தொகுதிகள் இரட்டை வாக்குரிமை தொகுதிகளாக இருந்தன. உதாரணமாக 1951 தேர்தலில் வேலூர் தொகுதியில் இருந்து ராமசந்தர், முத்துகிருஷ்ணன் ஆகியோரும், 1957 தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் இருந்து  இளையபெருமாள், கனகசபை பிள்ளை ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

ஆந்திராவில் 1957ல் நடைப்பெற்ற தேர்தலில் இரட்டை வாக்குரிமை தொகுதியான பார்வதிபுரம் தொகுதியில் போட்டியிட்ட வி.வி.கிரி தோற்றுப்போனார்.  பொது பிரிவிலும், தாழ்த்தப்பட்ட பிரிவிலும்  பழங்குடியின வேட்பாளர்களே வெற்றிப் பெற்றனர். அதனால் வி.வி.கிரி ‘இரட்டை வாக்குரிமை  தொகுதி’  முறையை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார்.  நீதிமன்றம் வழக்கை விசாரித்த வேகத்தை பார்த்தவர்கள் 1961ல் ‘இரட்டை வாக்குரிமை தொகுதிக்கு’  நாடாளுமன்றத்தில் முடிவு கட்டினர். இந்த சம்பவத்துக்கு முன்பே அம்பேத்கர் இறந்து விட்டதால் எதிர்க்க ஆளில்லாமல் சட்டம் எளிதாக  நிறைவேறியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: