×

திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு சிவகங்கை தொகுதிக்கு நிறுத்தி வைப்பு

* தேனியில் ஈவிகேஎஸ் இளங்கோவன்,
* திருச்சியில் திருநாவுக்கரசர் போட்டி

சென்னை: தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 9 மக்களவை தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அகில இந்திய காங்கிரஸ்  கமிட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு அறிவித்தது. தேனியில் ஈவிகேஎஸ் இளங்கோவனும், திருச்சியில் திருநாவுக்கரசரும் போட்டியிடுகின்றனர்.  சிவகங்கை தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.
தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுவை உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.  தமிழகத்தில் வரும் 26ம் தேதியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடையும் நிலையில், காங்கிரஸ் கட்சி நேற்று முன்தினம் நள்ளிரவு தனது 7வது  பட்டியலை வெளியிட்டது. அதில், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.

தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வது தொடர்பாக தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நேற்று அகில இந்திய தலைவர்களுடன்  டெல்லியில் ஆலோசனை நடத்தினர். இதன் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ‘நாளை  (இன்று) வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்’ என்று அறிவித்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் 1.30 மணி அளவில் தமிழகம்  உட்படப் பிற மாநிலங்களையும் சேர்த்து 35 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமை வெளியிட்டது. இதில் தமிழகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள 9 தொகுதிகளில் 8 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, திருவள்ளூர் தொகுதி  (தனி) ஜெயக்குமாரும், கிருஷ்ணகிரியில் டாக்டர் செல்லக்குமாரும், ஆரணியில் டாக்டர் விஷ்ணு பிரசாத்தும், கரூரில் ஜோதி மணி, திருச்சியில்  திருநாவுக்கரசர், தேனி தொகுதியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், விருதுநகரில் மாணிக்தாகூர், கன்னியாகுமரியில் எச்.வசந்த்குமார் ஆகியோரது  பெயர்கள் வேட்பாளர்கள் பட்டியலில் உள்ளது. இதில், வசந்த குமார் தற்போது நாங்குநேரி தொகுதியில் எம்எல்ஏவாக பதவி வகித்து வருகிறார். விஷ்ணு பிரசாத் செயல் தலைவராக உள்ளார். அகில இந்திய செயலாளர்களாகப் பதவி வகித்து வரும் செல்லக் குமார் மற்றும் ஜெயக்குமாருக்கும்  வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதைத் தவிர்த்து முன்னாள் தலைவர்களான ஈவிகேஎஸ் இளங்கோவன் மற்றும் திருநாவுக்கரசர் உள்ளிட்டோரும்  வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மாநில செய்தி தொடர்பாளராக உள்ள ஜோதிமணிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 2 நாட்களில்  வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்பதால் அது தொடர்பான பணிகளில் வேட்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். இதன்பிறகு கூட்டணிக்  கட்சித் தலைவர்களைச் சந்தித்து வாழ்த்து பெறத் திட்டமிட்டுள்ள காங்கிரஸ் வேட்பாளர்கள் 3 நாட்களில் பிரசாரத்தைத் தொடங்குவார்கள் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்டியலில், சிவகங்கை தொகுதி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு ஒதுக்கப்பட்டு விட்டதாகக் காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே பேச்சு  அடிப்பட்டது. அவர் அந்த தொகுதியில் தேர்தல் பணி தொடங்கி விட்டதாக கூறப்பட்டது. மேலும் தமிழக காங்கிரஸ் தலைமை டெல்லிக்கு அளித்த  வேட்பாளர் பட்டியலில் அவர் பெயர்தான் இருந்தது.

ஆனால் அந்த பட்டியலை பார்த்த ராகுல் காந்தி, கார்த்தி சிதம்பரம் பெயரை நீக்கி விட்டதாக  டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே அந்த தொகுதியில் போட்டியிட சுதர்சன நாச்சியப்பனுக்கு வாய்ப்பு வழங்கலாமா என்று கட்சித்  தலைமை யோசித்து வருகிறது. இந்த குளறுபடியால்தான் சிவகங்கை வேட்பாளர் அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DMK ,alliance ,constituency ,Sivagangai , DMK alliance, Congress candidates, Sivaganga
× RELATED திமுக கூட்டணி தேர்தல் அலுவலகம் திறப்பு