×

அடிப்படை வசதிகள் செய்து தராததால் மலைவாழ் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

போடி: அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து, தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக போடி அருகே மலைவாழ் கிராம மக்கள் போஸ்டர் அடித்து எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். தேனி மாவட்டம் போடி அருகே மேற்குதொடர்ச்சி மலையில் கொட்டகுடி கிராம பஞ்சாயத்து உள்ளது. இந்த பஞ்சாயத்தின் கீழ் குரங்கணி, கொழுக்குமலை, சாலப்பாறை, மேல்மட்டம் முட்டம், டாப் ஸ்டேஷன் உள்ளிட்ட 9 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியில் காபி, மிளகு எலுமிச்சை உள்ளிட்டவை பயிரிடப்படுகின்றன.இந்த கிராமங்களில் குடிநீர், மின்சாரம், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. குரங்கணியிலிருந்து முதுவாக்குடி வரையிலான மண் சாலையில், தோட்ட தொழிலாளர்கள மற்றும் விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் வாகன போக்குவரத்து இருந்தது. இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வனத்துறையினர் இப்பகுதியில் கேட் அமைத்து, வாகன போக்குவரத்துக்கு தடை விதித்தனர். மேலும் கடும் சோதனைக்கு பின்னரே, தோட்ட தொழிலாளர்கள் நடந்து செல்ல அனுமதிப்படுகின்றனர்.

எனவே குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர கோரியும், வனத்துறையால் அமைக்கப்பட்டுள்ள கேட்டை திறந்து விட கோரியும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இது தொடர்பாக அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில் அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து, நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பது என்று இப்பகுதி மக்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து பல்வேறு பகுதிகளில் போஸ்டர்களை ஒட்டி கிராம மக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Hillary ,facilities , Basic facilities, tribal people, electoral neglect
× RELATED வாக்குச்சாவடிகள் அடிப்படை வசதிகள்...