×

ஆந்திராவில் வேட்பாளர்கள் மனுதாக்கல்: முதல்வர் சந்திரபாபு நாயுடு சொத்து மதிப்பு உயர்வு...ஜெகன்மோகன்ரெட்டிக்கு குறைந்தது

திருமலை: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சொத்து விவரம் கடந்த 2014ம் ஆண்டைவிட தற்போது அதிகரித்துள்ளது.  ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் சொத்து தற்போது குறைந்துள்ளது. ஆந்திராவில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேற்று மனுதாக்கல் செய்தனர். அப்போது அவர்கள் தங்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்தனர். அதில் ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும்  வேட்பாளர்களில் 90 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் என தெரியவந்துள்ளது.  இதில், ஜனசேனா  கட்சி தலைவர் நடிகர் பவன் கல்யாண் அசையும், அசையா சொத்துக்கள் அனைத்தும் சேர்த்து ரூ.52 கோடி எனவும், தனது அண்ணி  சுரேகாவிடம் ரூ.1 கோடி, இயக்குனர் திரிவிக்ரமிடம் ரூ.2.4 கோடி மற்றும் வெளியிடங்களில் ரூ.33 கோடி கடன் உள்ளதாக  தெரிவித்துள்ளார். மேலும் ரூ.1 கோடி மதிப்புள்ள வால்வோ சொகுசு கார் உட்பட 5 கார்கள், ரூ.32 லட்சம்  மதிப்புள்ள ஒரு பைக் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதேபோல், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சித்தூர் மாவட்டம் குப்பம் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக நேற்று அவரது சார்பில் தெலுங்கு தேசம் கட்சியினர் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.  அப்போது அவர் தாக்கல் செய்த மனுவில், மொத்தம் ரூ.700 கோடி உள்ளதாக தெரிவித்துள்ளார். இதில் அசையா சொத்து ரூ.19.96 கோடி, அசையும் சொத்து ரூ.47.38 லட்சம், மனைவி புவனேஸ்வரி பெயரில் ரூ.574 கோடி சொத்து,  அசையா சொத்து ரூ.95 கோடி என தெரிவித்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு தாக்கல் செய்த வேட்புமனுவில் மொத்த சொத்து மதிப்பு ரூ.196 கோடி என தெரிவித்த நிலையில் 5 ஆண்டுகளில் ரூ.700 கோடியாக  அதிகரித்துள்ளது.சந்திரபாபு நாயுடு மகன் லோகேஷ் குண்டூர் மாவட்டம் மங்களகிரி தொகுதிக்கு மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில் சொத்து மதிப்பு ரூ.375 கோடி எனவும், இதில் அசையும் சொத்து ரூ.66.78 கோடி, அசையா  சொத்து ரூ.253.68 கோடி, தனது மனைவி பிராமினியை தொழிலதிபராக குறிப்பிட்டுள்ள லோகேஷ் அவரது பெயரில் மொத்தம் ரூ.18.74 கோடி எனவும், இதில் அசையா சொத்து ரூ.14.40 கோடி, மகன் தேவான்ஸ்க்கு ரூ.16.17 கோடி  எனவும், இதில் அசையா சொத்து ரூ.3.88 கோடி என தெரிவித்துள்ளார்.

அதேபோல் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன்ரெட்டி தாக்கல் செய்த அபிடவிட்டில் 31 வழக்குகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். மொத்த சொத்து மதிப்பு ரூ.339.89 கோடி உள்ளதாகவும், இதில் தனது மனைவி  பாரதி பெயரில் ரூ.31.59 கோடி, மகள் ஹர்ஷினி ரெட்டி பெயரில் ரூ.6 கோடியே 45 லட்சத்து 62 ஆயிரத்து 191, வர்ஷாரெட்டி பெயரில் ரூ.4.59 கோடி உள்ளதாக தெரிவித்துள்ளார். இதில் ரூ.35.30 கோடி அசையா சொத்தும், ரூ.31.59  கோடி அசையும் சொத்து இருப்பதாகவும், ரூ.1.19 கோடி கடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 2014ம் ஆண்டு தேர்தலின்போது ரூ.416 கோடி சொத்து இருப்பதாக  ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்த நிலையில் தற்போது குறைந்து  ரூ.339.89 கோடி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Andhra Pradesh ,CM Chandrababu Naidu , Andhra Pradesh, candidates nomination, Chief Minister Chandrababu Naidu, Asset Value, Jaganmohan Reddy
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி