போக்குவரத்து கழக அதிகாரிகள் டார்ச்சர் தவிக்கும் மினி பஸ் உரிமையாளர்கள்

மார்த்தாண்டம்: குமரி மாவட்டத்தில் 243 மினி பஸ்கள் உரிமம் பெற்று இயங்கி வந்தன. டீசல் விலையேற்றம், உயர்த்தப்பட்ட வரிகள், போதிய வருவாய் இன்றி நஷ்டம், போக்குவரத்து கழக அதிகாரிகளின் கடும் டார்ச்சர் என பல்வேறு பிரச்னைகளை சந்திக்க முடியாமல், பல மினி பஸ்களை இயக்க முடியாமல் அதன் உரிமையாளர்கள் நிறுத்தி விட்டனர். மார்த்தாண்டத்தை பொறுத்தவரை, பஸ் நிலையம், காந்தி மைதானம், தியேட்டர் ஜங்ஷன், வடக்குத்தெரு, வெட்டுவெந்நி, குழித்துறை போன்ற பகுதிகளை மையமாக கொண்டு, 40க்கும் மேற்பட்ட மினி பஸ்கள் இயங்கி  வருகின்றன. ஆனால், இந்த மினி பஸ்கள் வரையறுக்கப்பட்ட வழித்தடங்களில் இயங்கவில்லை என கூறி, போக்குவரத்து கழக அதிகாரிகள் கடும் டார்ச்சர் செய்து வருகின்றனர். வழித்தடத்தில் சென்று கொண்டிருக்கும் மினி பஸ்களை, ஜீப்களில் வரும் போக்குவரத்து கழக அதிகாரிகள் திடீரென வழிமறித்து, காவல் நிலையங்களில் மினி பஸ்களை ஒப்படைத்து விடுகின்றனர். இதனால், பல நேரங்களில்  போக்குவரத்து நெரிசல் மற்றும் மினி பஸ் ஊழியர்களுக்கும், போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் என ஏற்பட்டு வருகிறது. இதனால், மினி பஸ் ஊழியர்கள் கடும் மன உளைச்சலுக்கு  ஆளாகியுள்ளனர்.

இது குறித்து குமரி மாவட்ட மினி பஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், ‘போக்குவரத்து கழக ஊழியர்கள் எக்காரணம் கொண்டும் தனியாகவோ, ஆர்டிஓ அல்லது காவல்துறையினருடனோ சென்று மினி  பஸ்களை தடுக்கவோ, ஆய்வு செய்யவோ கூடாது’ என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனாலும், போக்குவரத்து கழக அதிகாரிகள், மினி பஸ்களை தடுத்து நிறுத்தி ஆய்வு செய்து வருகின்றனர்.நீதிமன்ற உத்தரவை இதுபோல அதிகாரிகளே மீறும்பட்சத்தில், எங்களை போன்ற சாதாரண மக்களுக்கு எப்படி நியாயம் கிடக்கும். மேலும், இதன் மூலம் எங்கள் உரிமை பறிக்கப்படுகிறது. எனவே, நீதிமன்ற உத்தரவை மீறும்  போக்குவரத்து கழக அதிகாரிகள், ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். போக்குவரத்து கழக ஊழியர்கள் மினிபஸ்களை பறிமுதல் செய்ய உயர்நீதிமன்றத்தில் தடை ஆணையும் பெற்றுள்ேளாம். மேலும்  கலெக்டரை சந்தித்து புகார் மனு அளிக்கவும் முடிவு செய்துள்ளோம் என்றனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக போக்குவரத்து கழக ஊழியர்கள் மார்த்தாண்டத்தில் சில மினி பஸ்களை தடுத்து நிறுத்தி சிறைபிடித்தனர். பின்னர் போலீசாரை வரவழைத்து ஒப்படைத்தனர். போலீசார் மினிபஸ்களை காவல்  நிலையம் கொண்டு சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: