திருவெண்ணைநல்லூர் அருகே அதிசயம்: 9 எலுமிச்சம் பழம் ரூ.1.55 லட்சத்துக்கு ஏலம்

திருவெண்ணைநல்லூர்: திருவெண்ணைநல்லூர் அருகே முருகன் கோயில் திருவிழாவில் வேலில் சொருகப்பட்ட 9 எலுமிச்சம் பழம் ரூ. 1 லட்சத்து 55 ஆயிரத்து 100க்கு ஏலம் போனது.விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ளது ஒட்டனந்தல் கிராமம். இங்கு ரத்தினவேல் முருகன் கோயில் உள்ளது. இக்கோயில் இரட்டை குன்றின் மீது அமைந்துள்ளதால் இரட்டை குன்று முருகன் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயில் கடலூர்- சித்தூர் சாலை ஆமூர் பஸ்நிறுத்தம் பகுதியிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயில் கருவறையில் வேல் மட்டுமே இருக்கும் இங்கு ஆண்டு தோறும் பங்குனி உத்திர திருவிழவை முன்னிட்டு பிரம்மோற்சவ விழா நடப்பது வழக்கம். கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தினமும் சுவாமி வீதியுலாவும், 18ம் தேதி முருகன், வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாணமும், 20ம் தேதி தேரோட்டமும், 21ம் தேதி காவடி பூஜையுடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது. 11ம் நாளான நேற்று நள்ளிரவு 11 மணிக்கு இடும்பன் பூஜை நடந்தது.

கடந்த 12ம் தேதி துவங்கி 20ம் தேதி வரை 12 நாட்கள் நடைபெற்று வந்த ஒவ்வொரு திருவிழா நாளிலும் கருவறையில் உள்ள வேலில் எலுமிச்சம் சொருகப்பட்டு அதை தினமும் எடுத்து பூஜைசெய்து பத்திரப்படுத்தி வைப்பார்கள். இதைத்தொடர்ந்து பூஜை செய்து வைத்திருந்த 9 நாள் பழங்களையும் 11ம் நாளில் இடும்பன் பூஜையில் ஏலம் விடுவது வழக்கம். அதேபோல் நேற்று நள்ளிரவு 11 மணிக்கு ஏலம் துவங்கியது. அப்போது இடும்பனுக்கு கருவாட்டுக்குழம்பு சாதம் வைத்து படையலிட்டு ஏலம் துவங்கப்பட்டது. ஏலத்தை கோயில் நாட்டாமை பாலகிருஷ்ணன் ஆணி தைத்த செருப்பின் மீது ஏறி நின்று நடத்தினார். ஏலத்தில் முதல்நாள் பழம் விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த ஜனார்த்தனன், வெனிஷா தம்பதியினர் குழந்தை பாக்கியம் வேண்டி ரூ.41 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்தனர். 2ம் நாள் பழம் தொழுதூர் அடுத்த ஏந்தல் பகுதியைச்சேர்ந்த அய்யாக்கண்ணு, பானுபிரியா தம்பதியினர் ரூ.22 ஆயிரத்திற்கும், 3ம் நாள் பழம் ஒட்டனந்தல் சசிகலா, மாணிக்கம் தம்பதியினர் ரூ.19 ஆயிரத்திற்கும், 4ம் நாள் பழம் பெங்களூர்  ஆனந்தன், சத்யா ரூ.8 ஆயிரத்து 100க்கும், 5ம் நாள் பழம் சிறுலாப்பட்டு ராஜீவ்காந்தி, சூரியா ரூ.16 ஆயிரத்திற்கும், 6ம் நாள் பழம் மண்டகமேடு கிராமத்தைச் சேர்ந்த ரத்தினம், தேவி ரூ. 10 ஆயிரத்திற்கும், 7ம் நாள் பழம் திருமுண்டீச்சரம் கிராமத்தைச் சேர்ந்த உத்திராஜ் திருமண பாக்கியத்திற்காக ரூ.21 ஆயிரத்திற்கும், 8ம் நாள் பழம் மேட்டுக்குப்பம் முகுந்தன், நித்தியா ரூ. 9 ஆயிரத்திற்கும், 9ம் நாள் பழம் கர்நாடக மாநிலம் பெல்காம் பகுதியைச் சேர்ந்த ராவுசாகிப்,

ரூபாதேவி ரூ.9 ஆயிரத்திற்கும் என 9 பழங்கள் மொத்தம் ரூ.1 லட்சத்து 55 ஆயிரத்து 100க்கு ஏலம் போனது.கடந்த ஆண்டு 9 பழங்களும் ரூ.1 லட்சத்து 02 ஆயிரத்து 900க்கு ஏலம் போனது. பழத்தை ஏலம் எடுக்க கோயிலின் விதிமுறையில் உள்ளூர் வாசிகளுக்கே உரிமை என்பதால் அவர்களை உடன் வைத்துக்கொண்டே வெளியூர்காரர்கள் ஏலம் எடுத்தனர். வெளியூர்காரர்களுக்கு ஏலம் கேட்க உரிமை இல்லை. இதில் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த பழத்தை வாங்கி சாப்பிட்டால் குழந்தை பிறக்கும், 7ம் நாள் பழம் திருமண பாக்கியத்திற்கு சிறப்பு வாய்ந்தது. மேலும் தொழில் முன்னேற்றம், குடும்ப பிரச்னை உள்ளிட்ட பல்வேறு விதமான பிரச்னைகளை தீர்க்கும் என்பதால் அப்பகுதியினர் போட்டி போட்டுக்கொண்டு பழத்தை ஏலம் எடுத்தனர்.

ஏலம் எடுத்தவர்கள் குளித்துவிட்டு ஈரத்துணியுடன் சாமி முன்னால் மண்டியிட்டு பழத்தை வாங்கிச் சென்றனர். பின்னர் அவர்களுக்கு இடும்பனுக்கு வைத்து படையலிட்ட கருவாட்டுகுழம்பு சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏலம் முடிந்தவுடன் கோயிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் கருவாட்டு குழம்பு சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர். கடந்த ஆண்டு 3ம் நாள் பழம் ஏலம் எடுத்து சென்று சாப்பிட்ட பொய்கைஅரசூர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன், தனம் என்ற தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அவர்கள் அந்த குழந்தையுடன் நேற்று இரவு கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து ரூ.5 ஆயிரம் நேர்த்தி கடன் செலுத்தி சென்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: