×

தமிழகத்தில் மக்களவை தேர்தலை முன்னிட்டு டிஜிபி உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் மாற்றமா?

சென்னை: தமிழகத்தில் நடைபெறும் தேர்தலை முன்னிட்டு, டிஜிபி உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்று திமுக சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கை குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்து வருவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் அரசு சுவர்களில் எழுதப்பட்ட 1,77,977 தேர்தல் விளம்பரங்கள் அளிக்கப்பட்டுள்ளது. இதில் 2,033 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று தனியார் சுவர்களில் எழுதப்பட்ட 1,43,930 தேர்தல் விளம்பரங்கள் அளிக்கப்பட்டு 148 பேர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விளம்பரங்களை அகற்றுவதற்கான செலவுகளை கட்சி மற்றும் வேட்பாளரிடம் இருந்து பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் 50 ஆயிரத்துக்கு மேல் வெளியில் எடுத்துச் செல்லும்போது, வங்கியில் பணம் எடுத்ததற்குரிய ரசீது அல்லது ஏடிஎம் ரசீதுகளை ஆதாரமாக வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் பறக்கும் படையினர் பறிமுதல் செய்வார்கள். நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் சரியான ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்றதாக 5.21 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் இதுவரை 19.11 கோடி பணத்தை தேர்தல் ஆணையம் சார்பில் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன்னதாக, அதாவது ஏப்ரல் 16ம் தேதி மாலை 6 மணிக்கு பிறகு பிரசாரம் செய்யக்கூடாது. அதேபோன்று மதுரையில் இரவு 8 மணி வரை தேர்தல் நடைபெறுவதால், 16ம் தேதி இரவு 8 மணிக்கு பிறகு பிரசாரம் செய்யக்கூடாது. தமிழகம் முழுவதும் தற்போது 10 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் வந்துள்ளனர். இவர்கள், தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினருடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மீதமுள்ள 190 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் ஏப்ரல் மாதம் 15ம் தேதி வருவார்கள். பொது பார்வையாளர் வேட்புமனு தாக்கல் முடியும் தேதியான 26ம் தேதிக்கு பிறகு வருவார்கள். தமிழகத்தில் அனுமதி பெற்று வைத்துள்ள 21,999 துப்பாக்கிகளில் 18,980 துப்பாக்கிகள் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் கரூரில் பறக்கும் படையால் சுமார் 95 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த தங்கத்தை திரும்ப பெறுவதற்காக, சம்பந்தப்பட்ட வியாபாரிகள் உரிய ஆவணங்களை காட்டினர். அதைத்தொடர்ந்து அவர்களிடம் தங்கம் திரும்ப ஒப்படைக்கப்பட்டு விட்டது. தமிழகத்தில் நடைபெறும் தேர்தலை முன்னிட்டு, தமிழக டிஜிபி, சென்னை போலீஸ் கமிஷனர், உளவுத்துறை ஐஜிக்கள் உள்ளிட்ட சில போலீஸ் உயர் அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்று திமுக சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இது தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

`செல்பி’ படம் அனுப்பாதீர்கள்

அரசியல் கட்சியினர் மற்றும்  வேட்பாளர்கள் தேர்தல் விதிமுறைகளை மீறினால் பொதுமக்களே நேரடியாக புகார்  கொடுக்கலாம் என்று அறிவித்துள்ளது. அதன்படி இந்திய தேர்தல் ஆணையம்  சி-விஜில் ஆப் மூலம் பொதுமக்கள் தங்களிடம் உள்ள செல்போனில் படம் அல்லது  வீடியோ எடுத்து அனுப்பலாம். புகார் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக  வைக்கப்படும். தற்போதும் சிலர், சுவர் விளம்பரம் செய்துள்ளனர், கட்சி கொடி கட்டியுள்ளனர் என்பது போன்ற புகார்களை அனுப்புகிறார்கள்.  சிலர் தங்களது முகம் தெரிய வேண்டும் என்பதற்காக `செல்பி’யும் எடுத்து  அனுப்புகிறார்கள். இதுபோன்று, தேவையில்லாத செயல்களில் ஈடுபடாமல், தேர்தல்  நடத்தை விதிமுறைகளை ஆதாரத்துடன் பொதுமக்கள் புகார் அளித்தால் உடனடியாக  நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : police officers ,elections ,Tamil Nadu ,Lok Sabha , High police officers,DGP, replace , Lok Sabha elections in Tamil Nadu?
× RELATED தெலங்கானாவில் சந்திரசேகர ராவ்...