×

காவிரியில் மணல் கடத்தல் படுஜோர் : அரசு குவாரியில் மணல் கடத்திய 3 லாரிகளை மக்கள் சிறைபிடிப்பு

குமாரபாளையம்: காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததை பயன்படுத்தி மணல் கடத்தல் படுஜோராக நடந்து வருகிறது. இதனை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.பள்ளிபாளையம் அருகே, சமயசங்கிலி கதவணையில் மின்உற்பத்தி இல்லாத காலங்களில், 1.5 டிஎம்சி தண்ணீர் தேக்கப்படுவது வழக்கம். மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதால், சமயசங்கிலி கதவணை பராமரிப்பு பணிக்காக திறந்து விடப்பட்டுள்ளது.  இதனால், சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு குமாரபாளையம் புதுப்பாலம் வரை காவிரி ஆற்றில் மணல் திட்டுகள் காணப்படுகிறது. இந்த மணலை இரவுபகலாக டிராக்டர்களில் கொள்ளையடிக்கும் வேலையில், ஆளும்கட்சி ஆதரவோடு ஒரு கும்பல் ஈடுபட்டுள்ளது. நாள்தோறும் 20க்கும் மேற்பட்ட டிராக்டர்களில், சுமார் 200 லோடுகள் வரை மணல் திருடப்பட்டு வருகிறது.

ஆற்றில் இருந்து எடுக்கப்படும் மணல், குமாரபாளையம் காவிரி ஆற்றங்கரையோரமுள்ள தோட்டம் மற்றும் தோப்புகளில் குவியல் குவியலாக கொட்டி வைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளின் ஒத்துழைப்போடு மணல் கொள்ளை நடப்பதால், அங்கேயே சல்லடை வைத்து சாவகாசமாக சலித்து எடுத்துச் செல்கின்றனர். மணல் கொள்ளையை தடுக்க அமைக்கப்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகளை கொண்ட பறக்கும் படை, செயலிழந்து பலமாதங்களாகிறது. இதுகுறித்து காவிரி கரையோரப்பகுதி மக்கள் கூறுகையில், ‘இரவில் பெட்ரோமாக்ஸ் லைட் வைத்து மணலை சலித்து ஏற்றிச்செல்லும் இந்த கொள்ளை கும்பலை பிடிக்க, அதிகாரிகள் இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதனால், மணல் கொள்ளை கும்பலின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. செல்போனுடன் காவிரி ஆற்றுக்குள் யாராவது இறங்கினால், அவர்களை துரத்தி போனை பறித்துக் கொண்டு அடித்து விரட்டுகின்றனர்.

அதிகாரிகளின் ஒத்துழைப்போடு ஆளுங்கட்சியினர் நடத்தும் இந்த மணல் கொள்ளை குறித்து, கலெக்டர் நடவடிக்கை எடுக்காவிட்டால், மக்களை திரட்டி மணல் திருடும் டிராக்டர்களை பறிமுதல் செய்வோம்,’ என்றனர். நாமக்கல் மாவட்டத்தில், காவிரிக் கரையோரங்களில்  அதிக அளவில் மணல் கொள்ளை நடந்து வருகிறது. இது தொடர்பான செய்தி நேற்று தினகரன் நாளிதழில் வெளியானது. இந்நிலையில் நேற்று, மோகனூர் அருகே அரசு மணல் குவாரியில் இருந்து, பர்மிட் இல்லாமல் அதிக அளவில் மணல் லோடு ஏற்றி வந்த 3 லாரிகளை  பொதுமக்கள் சிறை பிடித்தனர். இது பற்றிய விபரம் வருமாறு: மோகனூர் அருகே உள்ள குன்னிபாளையம் காவிரி ஆற்றில், அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து லாரிகளில் மணல் அள்ளப்பட்டு, ஆரியூரில் உள்ள அரசு மணல் டெப்போவில் கொட்டி வைத்து பொதுப்பணித்துறையினர் மணல் விற்பனை செய்து வருகின்றனர்.

இங்கிருந்து முறைகேடாக லாரிகளில் நேற்று மணல் கடத்தி செல்லப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த மோகனூர் ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் தலைவர் நவலடி மற்றும் பொதுமக்கள், நேற்று மாலை அரசு மணல் டெப்போவில் இருந்து வெளியே வந்த 3 மணல் லாரிகளை தடுத்து நிறுத்தி, சிறைபிடித்தனர். அந்த 3 லாரிகளிலும், போலி பர்மிட் மூலம் அதிக அளவில் 5 யூனிட் வரை மணல் கொண்டு செல்வது தெரியவந்தது. இதுகுறித்த தகவல் அறிந்த நாமக்கல் டிஎஸ்பி காந்தி, இன்ஸ்பெக்டர் சுகுமாரன் மற்றும் போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர், 3 லாரிகளையும் மணலுடன் பறிமுதல் செய்து, மணல் டெப்போவில் இருந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விசாரித்து வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Cauvery ,quarry , Cauvery, sand, smuggling
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கனஅடி