×

சிலை கடத்தல் புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஎஸ்பி காதர் பாட்சா மீண்டும் கைது

தஞ்சை : சிலை கடத்தல் புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஎஸ்பி காதர் பாட்சா 2-வது முறையாக கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டம் பழவூரில் உள்ள நாறும்பூநாதர் கோவில் மிகவும் பழமையான சிவன் கோவிலாகும். இந்தக் கோவிலில் இருந்து கடந்த 2005ம் ஆண்டு ஆனந்த நடராஜர் சிலை உட்பட மொத்தம் 13 சிலைகள் காணாமல் போயின. இந்த வழக்கை அப்போதைய சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி.க்களான காத்திஃப், காதர் பாட்சா மற்றும் காவல் ஆய்வாளர் ஜீவானந்தம் ஆகியோர் விசாரணை செய்தனர். விசாரணையின் போது இந்த சிலைகளை, சிலைக்கடத்தல் மன்னன் தீனதயாளன் மும்பையை சேர்ந்த வல்லப பிரகாஷ் என்பவர் மூலமாக லண்டனுக்கு கடத்தி அங்கு சுபாஷ் கபூர் என்பவரின் அருங்காட்சியகத்துக்கு விற்றது தெரிய வந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து சிலை கடத்தல் வழக்கை விசாரித்து வந்த டி.எஸ்.பி.க்கள் காத்திஃப், காதர் பாட்ஷா ஆகியோர் தீனதயாளனை கைது செய்யாமல் இருக்க பெருமளவில் பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கை ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் விசாரணைக்கு ஏற்றதைத் தொடர்ந்து தீனதயாளன், வல்லப பிரகாஷ், சுபாஷ் கபூர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் நடத்திய சோதனையில், சுபாஷ் கபூர், வல்லப பிரகாஷுக்கு எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அதில் விசாரணை அதிகாரிகள் தங்களிடம் பெருமளவு பணத்தையும் பெற்றுக்கொண்டு தாங்களை சிக்க வைக்க முயல்வதாக எழுதியிருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து நாறும்பூ நாதர் கோவில் சிலைகள் திருட்டு குறித்து விசாரித்து வந்த டி.எஸ்.பிக்கள் காத்திஃப், காதர் பாட்சா, காவல் ஆய்வாளர் ஜீவானந்தம் ஆகியோர் இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து டி.எஸ்.பி. காத்திஃப் ஓய்வு பெற்றதையடுத்து, காதர்பாஷா சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் தலைமறைவானார். கடுமையான தேடலுக்கு பிறகு 13 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கும்பகோணத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 2017ம் ஆண்டு டிச., மாதம் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில், காதர் பாட்சா 2வது முறையாக கைது செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை வரும் ஏப்ரல் 4 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Catherine Batcha , Idol busting,Suspends,DSP Kader Bhatsa,Arrested
× RELATED சிலை கடத்தல் புகாரில் சஸ்பெண்ட்...