இன்று உலக தண்ணீர் தினம் : நீரை சேமிப்போம்... வரும் தலைமுறைகளை வாழ வைப்போம்

இன்று உலக தண்ணீர் தினம். ‘நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவர் வாக்கு. ‘வாட்டர் ஈஸ் தி எலிக்சர் ஆப் லைப்’ என்பார்கள். அதாவது, இந்த உலகை, உலக உயிர்களை வாழவைக்கும் அமிர்தம் போன்றது நீர். உலகில் உள்ள நீர் வள ஆதாரங்களை மேம்படுத்தி, நீர் பற்றாக்குறையைப் போக்கவும், மக்களிடையே நீர் சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், க்டந்த 1993-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22-ம் தேதி உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நாம் வாழ்ந்து வரும் புவியானது 30% நிலப்பரப்பாலும், 70% நீராலும் சூழப்பட்டுள்ளது. ஆனால் 30% நிலப்பரப்பில் வசிக்கும் மக்களுக்கு தேவையான நீர் தற்போது வறண்டு கொண்டே வருகிறது.

சமீபத்தில் நடத்திய ஆய்வின்படி உலகில் சுமார் 200 நகரங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. இதில் தென் ஆப்பிரிக்காவின் உள்ள கேப்டவுண் நகரம் டே ஜீரோ எனப்படும் தண்ணீரில்லா நிலைக்கு சென்றது நமக்கு ஒரு எச்சரிக்கை மணி ஆகும். இந்த வரிசையில் நமது இந்தியாவில் பெங்களூரு நகரமும் உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.

பாரீஸ் ஒப்பந்தப்படி 2 டிகிரி செல்சியஸைக் கடக்காத வகையில்  உலக வெப்பத்தை பாதுகாத்தாலும் கூட மனிதர்களாகிய நதம் இதுவரை ஏற்படுத்திய சுற்றுச்சூழல் மாசுகளுக்கான கேடுகளைச் சந்தித்து தான் ஆக வேண்டும். உணவு இல்லை என்றாலோ, உடை இல்லை என்றாலோ உற்பத்தி செய்து கொள்ளலாம். நீர் இல்லை என்றால் எந்த சக்தியாலும் உற்பத்தி செய்யவே முடியாது. நீர் இல்லை என்றால் எந்த உயிருள்ள ஜீவனும் வாழ முடியாது.

உலகில் மூன்றில் ஒருவருக்கு போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை. ஐந்தில் ஒருவருக்கு சுகாதாரமான நல்ல குடி தண்ணீர் கிடைப்பதில்லை. அதை குடிப்பதால் மக்களுக்கு நோயும் ஏற்படுகிறது. குளிர்பானம் தயாரிக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்துள்ளனர். அந்த அனுமதியை ரத்து செய்தால் 3 அல்லது 5 மாவட்டங்களின் குடிநீர் தட்டுப்பாடு குறையும். தமிழகத்தில் ஆண்டுதோறும் ஏராளமான தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. அதனை சேமிக்க புதிய அணைகள், சிறிய தடுப்பணைகளை கட்டி நீரை சேமிக்கலாம். மாயமான மழைநீர் சேமிப்புவறட்சியை தவிர்க்க இயற்கை கொடுத்த வரம் மழை. அவ்வப்போது பெய்யும் மழையை வீணாக்காமல் நிலத்தடியில் சேகரித்தால், கோடை காலத்திலும் குடிநீர் பஞ்சம் வராது.

உலகத்தில் 97.5 சதவீதம் உப்பு சுவை கொண்ட நீர் உள்ளது. மீதமுள்ள 2.5 சதவீதம் சுத்தமான நீர். இதில் 2.24 சதவீதம் துருவ பகுதிகளில் பனிப்பாறைகளாகவும், பனிக்கட்டிகளாகவும் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எஞ்சியுள்ள 0.26 சதவீத தண்ணீரைதான் குடிநீராகவும், விவசாயத்துக்கும் பயன்படுத்தும் நிலை உள்ளது. மக்களின் தேவையை இந்த தண்ணீர் பூர்த்தி செய்வது கேள்வி குறிதான்.உலகில் கிடைக்க கூடிய சொற்ப அளவு குடிநீரும் கழிவுகளால் மாசடைந்து வருகிறது. ஆண்டுதோறும் 40 ஆயிரம் டன் கழிவுகள் நீரை மாசுபடுத்தி வருகின்றன. நிலத்தடி நீரும் உறிஞ்சப்பட்டு நீர்வள ஆதாரங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. உலகம் முழுக்க தினமும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் சுகாதாரமற்ற தண்ணீரால் ஏற்படும் தொற்றுநோயால் இறப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. மாசுபட்ட குடிநீரால் டைபாய்டு, அமிபியாசிஸ், ஜியார்டியாசிஸ், அஸ்காரியாசிஸ், கொக்கி புழு, தோல் நோய், காது வலி, கண் நோய், வயிற்று போக்கு உள்ளிட்ட நோய் தாக்குதல்கள் ஏற்படுகிறது.

நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டியது, நீர் ஆதாரங்களை காக்க வேண்டியது, குடிநீர் மாசுபடாமல் இருக்க உதவுவது மக்களின் சமுதாய கடமையாகும். ‘தண்ணீர் மாசு படாமல் பாதுகாப்போம். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவோம். நீர்நிலைகளை பாதுகாப்போம். தண்ணீர் வீணாவதை தடுப்போம்’ என்ற உறுதிமொழியை உலக தண்ணீர் தினமான இன்றைய நாளில் ஏற்று அதை நிறைவேற்ற பாடுபடுவோம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: