அதிமுக எம்எல்ஏ திடீர் மரணம்: பலம் குறைந்ததால் எடப்பாடிக்கு மேலும் நெருக்கடி

சூலூர்: கோவை சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. கனகராஜ் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு முதல்வர், துணை முதல்வர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.  கோவை  மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் கனகராஜ் (67).  இவர், நேற்று காலை 7.45 மணிக்கு காமநாயக்கன்பாளையம் அருகே வீ.மேட்டூரில்  உள்ள அவரது வீட்டில் பேப்பர் படித்துக்கொண்டிருந்தார். அப்போது, அவரது மனைவி  ரத்தினத்திடம், குடிக்க சுடுதண்ணீர் வேண்டும் எனக்கேட்டுள்ளார். அவர், சுடுதண்ணீர் எடுத்து வருவதற்குள், கனகராஜ் நாற்காலியில் சாய்ந்தபடி  மயங்கி கிடந்தார்.  இதைப்பார்த்து, அதிர்ச்சி அடைந்த ரத்தினம் கூச்சல் போட்டார். அக்கம்பக்கத்தினர் வந்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கிருந்து டாக்டர்கள்  விரைந்து வந்து, கனகராஜ் உடலை பரிசோதித்தனர். அப்போது, மாரடைப்பு  காரணமாக இறந்துவிட்டது தெரியவந்தது. இவருக்கு ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் இருந்துள்ளது.

இதையடுத்து, கனகராஜ் உடல், வதம்பச்சேரியில் உள்ள அவரது மகன் வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர். மாலையில், கனகராஜ் உடல், அவரது வீட்டுக்கு அருகில் உள்ள பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.  1951ம் ஆண்டு பல்லடம் அருகேயுள்ள வி.வடுகபாளையம் கிராமத்தில்  பிறந்தார். இவர், 8ம் வகுப்பு வரை படித்துள்ளார். விவசாயம், கோழிப்பண்ணை  மற்றும் தேங்காய் வியாபாரம் செய்துவந்தார். 1972ல் இருந்தே அதிமுகவில் உறுப்பினராக இருந்தார். கடந்த 2016ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் சூலூரில்  அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். இவரது மனைவி ரத்தினம் (58), கடந்த 2006  முதல் தற்போது வரை சுல்தான்பேட்டை ஒன்றிய குழு உறுப்பினராக  உள்ளார். மகன்  சண்முகசுந்தரம் வி.மேட்டூர், ஜெயலலிதா பேரவை கிளை செயலாளராக  உள்ளார். மகள்  பாமா விஜயா சுல்தான்பேட்டை ஒன்றிய இளைஞர் மற்றும்  இளம்பெண்கள் பாசறை துணை  செயலாளராக உள்ளார்.

காலியிடம் 22 ஆனது: மக்களவை தேர்தலுடன் 21 சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில் அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளை விடுத்து 18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சூலூர் எம்.எல்.ஏ. கனகராஜ் மரணம் காரணமாக தற்போது தமிழக சட்டசபையில் காலியாக உள்ள இடங்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்து உள்ளது. 2016ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு திருப்பரங்குன்றம் எம்எல்ஏ சீனிவேல் இறந்தார். அதன்பின்னர் நடந்த இடைத்தேர்தலில் போஸ் வெற்றி பெற்றார். தற்போது அவரும் மரணமடைந்துள்ளார்.

அதேபோல, ஆர்.ேக.நகர் தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஜெயலலிதா, திருவாரூர் எம்எல்ஏ கலைஞர் கருணாநிதி ஆகியோர் மரணமடைந்தனர். தற்போது சூலூர் எம்எல்ஏ மரணமடைந்தார். இதனால் கடந்த 3 ஆண்டுகளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

 மேலும், அதிமுகவில் 134 எம்எல்ஏக்கள் இருந்தனர். அதில் டிடிவி தினகரனுக்கு ஆதரவு அளித்ததாக 18 பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். இதனால் அதிமுகவின் பலம் 116 ஆக குறைந்தது. அதில் தற்போது 3 பேர் தினகரனுக்கு ஆதரவாக உள்ளனர். மேலும் அதிமுக சின்னத்தில் போட்டியிட்ட கருணாஸ் உள்ளிட்ட 3 பேர் அதிமுகவுக்கு எதிராக உள்ளனர். இதனால் அதிமுகவின் பலம் 110ஆக இருந்தது. அதன்பின்னர் ஓசூர் எம்எல்ஏவின் பதவி பறிக்கப்பட்டது. தற்போது எம்எல்ஏ கனகராஜ் மரணத்தால் அதிமுகவின் பலம் 108 ஆக குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி காலியிடம் 22ஆக உயர்ந்துள்ளது. இதனால் தமிழக சட்டப்பேரவையில் உறுப்பினர்களாக 212 பேர் உள்ளனர். அதில் மெஜாரிட்டிக்கு 107 பேர் போதும். அதிமுகவில் தற்போது 108 பேர் உள்ளனர். இதனால் தற்போதைய நிலையில் அதிமுக அரசு தப்பியுள்ளது. ஆனால் 18 தொகுதிக்கான இடைத் தேர்தல் நடைபெறுகிறது. அதில், இதனால் அதிமுக 18 தொகுதிகளில் குறைந்தது 8 தொகுதிகளிலாவது ஜெயிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் அதிமுக எந்த தொகுதியிலும் வெற்றி பெற முடியாத அளவுக்கு மக்கள் வெறுப்பில் உள்ளதால், தமிழக அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.

திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்

கனகராஜ் மறைவுக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், `சூலூர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் நேற்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். அவரின் மறைவுக்கு தி.மு.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்தினருக்கும், அதிமுக தொண்டர்களுக்கும் எனது அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: