×

3 மாநிலம்னா வாங்க... டெல்லின்னா போங்க:காங்கிரசுக்கு ஆம் ஆத்மி புதிய கெடு

டெல்லியில் உள்ள ஏழு மக்களவை தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட விரும்பி அக்கட்சியுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆம் ஆத்மி பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஆனால், இதில் உடன்பாடு எட்டப்படாததால் ஆம் ஆத்மி அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தது.  எனினும், பாஜவை வீழ்த்த காங்கிரசும், ஆம் ஆத்மியும் இணைந்து போட்டியிட வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்டோர் வலியுறுத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சி கூட்டணிக்காக புதிய கெடுவை விதித்து காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் பவாருடன் ஆம் ஆத்மியின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை எம்பியுமான சஞ்சய் சிங் கலந்து பேசியதாக வெளியான புதிய தகவலின்படி, ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் 3 தொகுதியிலும், அரியானாவில் இரண்டிலும், டெல்லியில் 5 தொகுதியிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது. இதற்கு மேல் முடிவெடுக்க வேண்டியது காங்கிரஸ் தான் என ஆம் ஆத்மி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், காங்கிரஸ் தரப்பில் இதுவரை எந்தவித பதிலும் தெரிவிக்கவில்லை. இதில் இறுதி முடிவெடுக்க வேண்டியது ராகுல் காந்தி தான் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாளை முதல் பிரசாரம்
ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் தங்களது பிரசாரத்தை நாளை முதல் ெதாடங்க உள்ளனர். ஏப்ரல் 30ம் தேதி வரை சுமார் 280 மக்கள் சபை கூட்டங்களை நடத்த உள்ளதாக ஆம் ஆத்மியின் டெல்லி மாநில பொறுப்பாளர் கோபால்ராய் ஏற்கனவே தெரிவித்துள்ளார். பிரசாரத்தை ஆம் ஆத்மி கட்சி இரண்டு கட்டமாக மேற்கொள்ள உள்ளது. மார்ச் 23ம் தேதி முதல் ஏப்ரல் 7ம் தேதி வரை முதல்கட்டமாகவும், ஏப்ரல் 8 முதல் ஏப்ரல் 30ம் தேதி வரை இரண்டாம்கட்ட பிரசாரத்தை  தொடங்கி முடிக்க உள்ளது. இதில், கெஜ்ரிவால் சுமார் 35 மக்கள் சபை கூட்டங்களில் பங்கேற்க உள்ளார்.

பேச்சுவார்த்தை இல்லை கெஜ்ரிவால் அறிவிப்பு
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறுகையில், “டெல்லியில் கூட்டணி அமைத்து போட்டியிட காங்கிரஸ் கட்சி மறுத்துவிட்டது. கூட்டணி குறித்து தற்போது இரு தரப்பிலும் எந்தவித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை” என கூறினார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Purchase ,Statenagar ,Delhi ,Aam Aadmi ,Congress , Delhi, Aam Aadmi, Congress
× RELATED களியனுர் ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு