சித்திரை திருவிழா, பெரிய வியாழனன்று நடக்கவுள்ள தேர்தல் தள்ளிவைக்க கோரிய வழக்குகளில் இன்று தீர்ப்பு: சென்னை ஐகோர்ட் அறிவிப்பு

சென்னை: மதுரை சித்திரை திருவிழா, பெரிய வியாழன் போன்ற காரணங்களுக்காக தேர்தல் தேதியை மாற்றக்கோரிய வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கவுள்ளது.  மதுரையில் சித்திரை திருவிழா நடைபெற இருப்பதால் மதுரை தொகுதியில் தேர்தல் தேதியை மாற்றியமைக்க வேண்டுமென பார்த்தசாரதி என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  கிறிஸ்துவர்களின் பெரிய வியாழன் பண்டிகையும் வாக்குப்பதிவு நாளில் வருவதால் கிறித்துவ பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை மாற்ற கோரி தமிழ்நாடு பிஷப் கவுன்சில் தலைவர் அந்தோணி பாப்புசாமி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடருந்திருந்தார்.  கிறிஸ்துவ மக்களின் புனித வாரத்தில் தேர்தல் இருப்பதால் தங்கள் வழிபாடுகளை முழுமையாக நடத்த கிறித்துவ ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் முடியாது என்பதால் தேர்தல் தேதியை மாற்ற வேண்டுமெனக்கோரி கிறிஸ்துவ நல்லெண்ண இயக்க நிர்வாக அறங்காவலர் இனிகோ இருதயராஜ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த மூன்று வழக்குகளும் நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் கூறியிருப்பதாவது:  மதுரை சித்திரை திருவிழாவை கருத்தில் கொண்டு  வாக்குப்பதிவு முடியும் நேரமான மாலை 6 மணி என்பது இரவு 8 மணி என நீட்டிக்கப்பட்டுள்ளது.  தமிழக அரசின் ஒப்புதலை பெற்றுதான் தேர்தல் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்தலை அமைதியாகவும், முழுமையாகவும் நடத்த முடியுமென்று மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அறிக்கை அளித்துள்ளார்.

கிறிஸ்துவ பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை மாற்ற முடியாது. தேவலாயங்களுக்கு  பிரார்த்தனைக்கு வந்துசெல்பவர்கள் எவ்வித இடைஞ்சலும் இல்லாமல் ஆலங்களுக்கு செல்வதற்கு தனியாக தடுப்பு வேலிகள் அமைக்கப்படும். இதுதொடர்பாக தேவாலயங்கள் தரப்பில் கோரிக்கை மனு கொடுத்தால் பரிசீலித்து முடிவெடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவாதங்களை பதிவு செய்த நீதிபதிகள், மதம் சார்ந்த வழிபாடு எப்படி ஒவ்வொருக்கும் கடமையாக இருக்கிறதோ, அதேபோலதான் தேர்தலில் வாக்களிப்பதையும் கருத வேண்டும். தங்கள் பகுதியில் எவ்வித அசம்பாவிதமும் நடந்துவிடக்கூடாது என்பதில் ஒவ்வொரு கட்சியினரும் அக்கறை கொண்டுதானே இருப்பார்கள் என்று கருத்து தெரிவித்ததுடன் இந்த வழக்கில் நாளை (இன்று) தீர்ப்பளிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: