×

நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ளதால் 2 ஆயிரம் சிறப்பு நிதி வழங்குவது நிறுத்தம் : உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளதால் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு 2 ஆயிரம் சிறப்பு நிதி வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள 60 லட்சம் குடும்பங்களுக்கு சிறப்பு உதவி நிதியாக 2 ஆயிரம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதற்கான கணக்கெடுப்பும் நடந்து வருகிறது. இந்நிலையில், வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்பவர்களை அடையாளம் காணும் வரை 2000 நிதியுதவி திட்டத்துக்கு  தடை விதிக்க வேண்டும் எனக்கோரி விழுப்புரத்தை சேர்ந்த கருணாநிதி என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், ஏழை மக்களுக்கு 2 ஆயிரம் சிறப்பு நிதியுதவி வழங்குவதை எதிர்க்கவில்லை. சிறப்பு நிதி வழங்குவதற்காக அரசு மேற்கொள்ளும் நடைமுறையை மட்டுமே  எதிர்க்கிறோம். முதலில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் எனக் கூறிய அரசு, தேர்தல் ஆதாயத்திற்காக தற்போது, குடும்ப அட்டைதாரர்கள் அனைவரின்  விவரங்களையும் சேகரிக்கும் வகையில் தற்போது படிவங்களை விநியோகித்து வருகிறது. வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்பவர்களை அடையாளம் காண பல்வேறு விதிகளை வகுத்து 2007ல் தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அந்த அரசாணையை பின்பற்றி சிறப்பு உதவித்தொகை திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பயனாளிகளை கண்டறிய சரியான நடைமுறையை அரசு பின்பற்றிவருவதாக கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர். மேலும், இந்த வழக்கு விசாரணையின்போது, மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அரசாணை போலி என்று அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார். ஆனால்,  அரசாணையை திருத்தி  அதிகாரிகள் வெளியிட்டுள்ளதாக கூறி அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன் வாதிட்டார். அரசாணை தொடர்பான வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது வரைவு அரசாணை என்றும், அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டதே இறுதி அரசாணை என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் தலைமை செயலகத்தில் இருந்து அரசாணை ஆவணம் வெளியானது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர். அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வக்கீல் நீதிபதிகளிடம், நாடாளுமன்ற தேர்தல் காரணமாக 2 ஆயிரம் சிறப்பு நிதியுதவி வழங்குவதும், அதற்காக நடைபெற்றுவரும் கணக்கெடுப்பு பணியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். அரசுத் தரப்பின் இந்த வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை தேர்தலுக்கு பின்னர்  தள்ளிவைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : elections , 2,000 special funding , suspension , parliamentary elections
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...