×

கோர்ட்டில் நீரவ் மோடி சொன்ன கணக்கு வாங்குற சம்பளம் ரூ.18 லட்சம் ஜாமீனுக்கு ரூ.4.5 கோடி தர ரெடி

புதுடெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட நீரவ் மோடி, தான் மாதம் ரூ.18 லட்சம் சம்பளத்துக்கு வேலை பார்ப்பதாக கூறியுள்ளார். ஆனால், பெயில் கிடைக்க ரூ.4.5 கோடி தர தயாராக இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஸ்விப்ட் முறையில் பண பரிமாற்றம் செய்து ரூ.13,500 கோடி மோசடி செய்த நீரவ் மோடி, லண்டனுக்கு தப்பிச்சென்று தலைமறைவாக இருந்தார். அவர் அங்கு சுதந்திரமாக நடமாடுவது வீடிேயா ஆதாரங்கள் மூலம் தெரிய வந்தது. இதை தொடர்ந்து அமலாக்கத்துறையும், மத்திய அரசும் விடுத்த வேண்டுகோளை தொடர்ந்து நீரவ் மோடி கைது செய்யப்பட்டார். வங்கியில் கணக்கு துவக்கச்சென்ற அவரை பார்த்ததும் அடையாளம் கண்டு கொண்ட வங்கி கிளர்க் போலீசுக்கு சிக்னல் கொடுத்ததும், அங்கு அடுத்த நிமிடம் ஆஜரான போலீஸ் நீரவ் மோடியை கைது செய்து விட்டது. அவருக்கு ஜாமீன் வழங்க வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றம் மறுத்து விட்டது. ஆனால், நீரவ் மோடிக்கு ஜாமீன் கோரி ஆஜரான வக்கீல், சில ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்தார்.

அதில், லண்டனில் நீரவ் மோடி கடந்த ஜனவரி மாதம் முதல் வசித்து வருகிறார். முறைகேடு குற்றச்சாட்டுக்கு முன்பாகவே லண்டன் வந்து விட்டார். வேண்டுமென்றே தப்பி தரவில்லை. அவர் ஒரு நிறுவனத்தில் மாதம் ரூ.20,000 பவுண்டுக்கு (சுமார் ரூ.18 லட்சம்) வேலை பார்க்கிறார். வரி செலுத்துகிறார். எனவே லண்டனில் இருக்க அவருக்கு உரிமை உள்ளது என்று கூறி, தேசிய காப்பீடு பதிவு எண், வங்கி கணக்குகள் ஆகியவற்றையும் தாக்கல் செய்துள்ளார். அதோடு, நீரவ் மோடியின் மகன் லண்டனில் உள்ள பள்ளியில் கடந்த 5 ஆண்டுகளாக படித்து வருகிறார். நீரவ் மோடி நியூயார்க் தெருவில் உள்ள அபார்ட்மென்ட் எண் 42, 1010ல் வசித்து வருகிறார் எனவும், ஜாமீன் கிடைக்க 5 லட்சம் பவுண்ட் (சுமார் ரூ.4.5 கோடி) வழங்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால், அவருக்கு ஜாமீன் தர நீதிமன்றம் மறுத்து விட்டதால் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

‘விரைவில் வருவார்...’அதிகாரிகள் நம்பிக்கை


மல்லையா போல் நீரவ் மோடி விவகாரம் இழுத்துக்கொண்டே செல்லாது. அவர் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவார். சட்டத்தில் உள்ள ஓட்டையையும் பயன்படுத்தி அவர் நழுவிவிடக்கூடாது என்ற கவனத்துடன் முன்கூட்டியே போதுமான ஆவணங்கள் அனைத்தும் தாக்கல் செய்யப்பட்டு விட்டன என நீரவ் மோடி வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சிலர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பத்தோட பதினொன்னா அடைச்சுட்டாங்க

நீரவ் மோடி பெரும் பணக்காரர்தான். அதனால் தனக்கு தனி அறை கொடுக்கப்படும் என எதிர்பார்த்துள்ளார். ஆனால், அதற்கு நேர் மாறாக நடந்து விட்டது. இவர் தற்போது வாண்ட்ஸ்வொர்த் மெஜஸ்டி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சிறைச்சாலை விக்டோரியா மகாராணி காலத்தில் கட்டப்பட்டது. இதை கட்டியபோது ஒவ்வொரு சிறையிலும் ஒரு கைதியைத்தான் அடைத்து வைத்திருந்தனர்.

கைதிகள் எண்ணிக்கை அதிகரித்ததால், தற்போது ஒரு அறையில் 2 கைதிகள் அடைக்கப்படுகின்றனர். இங்கு சுமார் 1,430 ஆண் கைதிகள் உள்ளனர்.  அதைவிட முக்கியம் என்னவென்றால், இந்த சிறையில் ஆபத்து இல்லாத கைதிகளை, அதாவது, மனநிலை, உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள், படிப்பறிவு குறைவாக உள்ளவர்கள் போன்றவர்களைத்தான் அடைத்து வைத்துள்ளனர். இவர்களில் ஒருவரோடுதான் நீரவ் மோடி பொழுதை கழிக்க வேண்டும்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Modi , Nirav Modi, court, bail,
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...