×

சிவசேனா கடும் தாக்கு கோவாவில் நள்ளிரவு நாடகம் ஜனநாயகத்தின் கோர வடிவம்

* பாரிக்கர் சாம்பல் சூடு கூட ஆறாதநிலையில் பாஜ அரசியல் நாடகம் என கண்டனம்

மும்பை: கோவாவில் புதிய முதல்வர் நள்ளிரவில் அவசர அவசமாக தேர்வு செய்யப்பட்டதை “ஜனநாயகத்தின் கோர வடிவம்” என்று சிவசேனா விமர்சித்துள்ளது. கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவை அடுத்து புதிய முதல்வரை தேர்வு செய்தவதற்கான கூட்டம் பாஜ தலைவர் அமித்ஷா தலைமையில் கடந்த திங்கட்கிழமை நடந்தது. அந்த கூட்டத்தில் புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் தேர்வு செய்யப்பட்டார். கூட்டணி கட்சியை சேர்ந்த விஜய் சர்தேசாய், சுதின் தவில்கர் ஆகியோருக்கு துணை முதல்வர் பதவி அளிப்பதாக ஆசைக்காட்டி அவர்களுடைய தயவில் ஆட்சி அமைக்கப்பட்டது. புதிய முதல்வர் பிரமோத் சாவந்த் செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணியளவில் அவசர அவசரமாக முதல்வராக பதவி ஏற்றார். இதுகுறித்து சிவசேனாவின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னா தலையங்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது: மனோகர் பாரிக்கரின் அஸ்தி சூடு ஆறும் வரைகூட அவர்களால் (பாஜ) பொறுத்துக் கொள்ள முடியவில்லை. செவ்வாய்க்கிழமை வரை பொறுத்து இருந்தால் பாஜ அரசு கவிழ்ந்து இருக்கும். துணை முதல்வர்கள் இருவரும் காங்கிரசுடன் சேர்ந்து இருப்பார்கள்.

பூனைகளைப் போல தங்கள் பங்கை எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு துணை முதல்வர் பதவி கிடைத்து விட்டது. அதைத் தொடர்ந்து முதல்வரும் துணை முதல்வர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இது ஜனநாயகத்தின் கோர வடிவம் ஆகும். மனோகர் பாரிக்கரின் உடல் எரிந்து கொண்டிருந்த நிலையில் ஆட்சி அதிகாரத்தை பிடிப்பதற்கான போட்டிகள் தொடங்கிவிட்டது. ஆளும் கூட்டணியில் மொத்தம் 19 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ள நிலையில் இரண்டு பேர் துணை முதல்வர்களாக பதவியேற்று இருப்பது வெட்கக்கேடானது. நாங்கள் ஆளும் எந்த மாநிலத்திலும் துணை முதல்வர்களை நியமிக்க மாட்டோம் என்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பாஜ கூறியது. எனவேதான் சிவசேனாவுக்கு துணை முதல்வர் பதவி தரப்படவில்லை. ஆனால் பின்னர் பீகார், உபி., ஜம்மு காஷ்மீரில் துணை முதல்வர் பதவி அளிக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Shiv Sena ,Goa , Shiv Sena ,midnight drama ,democracy in Goa
× RELATED கொரோனா காலத்தில் மருத்துவமனையிடம்...