×

பணியாளர்கள் நியமனத்தில் முறைகேடு? அன்வர்ராஜா எம்.பியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

ராமநாதபுரம்: மதுரை வக்ப் போர்டு கல்லூரி பணியாளர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் தொடர்பாக, அதிமுக எம்பி அன்வர்ராஜாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்திய சம்பவம் ராமநாதபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவைச் சேர்ந்த அன்வர்ராஜா ராமநாதபுரம் எம்பியாகவும், வக்ப் போர்டு தலைவராகவும் உள்ளார். மதுரை வக்ப் போர்டு கல்லூரி பணியாளர்கள் நியமனத்தில்  பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து மதுரை சிபிஐ அதிகாரி கார்த்திகைசாமி, இன்ஸ்பெக்டர் வேலாயுதம், மதுசூதனன் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினர், நேற்று காலை 10 மணிக்கு, ராமநாதபுரம் ஓம் சக்தி நகரில் உள்ள அன்வர்ராஜா வீட்டிற்கு சென்றனர். அங்கு அவரிடம் சுமார் 3 மணிநேரம் விசாரணை நடத்தினர். விசாரணையில், இவ்வழக்கு தொடர்பாக மேலும் சில ஆவணங்களில் கையெழுத்து பெற்றதாக கூறப்படுகிறது. ஐகோர்ட் கிளை உத்தரவுப்படி விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் சிபிஐ நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. தேர்தல் நேரத்தில் ஆளுங்கட்சி எம்பி வீட்டில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் மக்களவை தேர்தலில் சிட்டிங் எம்பி அன்வர்ராஜாவுக்கு சீட் வழங்கப்படாமல், அதிமுக கூட்டணி கட்சியான பாஜ, ராமநாதபுரத்தில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : CBI , CBI probe , Anthraja MP
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...