பொள்ளாச்சி மாணவி பாலியல் விவகாரத்தில் காங். செயல்தலைவரிடம் சிபிசிஐடி விசாரணை

கோவை : பொள்ளாச்சி மாணவி பாலியல் விவகாரம் குறித்து காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாரிடம் சிபிசிஐடி போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி கல்லூரி மாணவி பாலியல்  விவகாரம் தொடர்பாக முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு அளித்த  வாக்குமூலத்தின் அடிப்படையில், சிபிசிஐடி போலீசார், தமிழக காங்கிரஸ் மாநில  செயல்தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு, விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பினர். அதில், வரும் 25.3.2019ம் தேதிக்குள் கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும் என குறிப்பிட்டிருந்தனர். இதை, ஏற்று, மயூரா ஜெயக்குமார், கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலத்தில் நேற்று மதியம் நேரில் ஆஜராகி, எஸ்.பி. நிஷா பார்த்திபனிடம் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்தார்.

அவரிடம் நடந்த விசாரணைக்குப் பிறகு, கோவை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் மயூரா ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:

பொள்ளாச்சி  கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வழக்கில், முக்கிய குற்றவாளியாக உள்ள திருநாவுக்கரசுவிடம் கடந்த 12.2.2019 அன்று சிபிசிஐடி போலீசார் விசாரணை  நடத்தியுள்ளனர். அப்போது அவர், அந்த குறிப்பிட்ட தேதியில் நானும், எனது  தந்தை கனகராஜுவும் கோவை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்துக்கு சென்றுவிட்டோம். மாநில  செயல்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மயூரா ஜெயக்குமாருக்கு சால்வை  அணிவித்தோம் என கூறியுள்ளார். இது, உண்மையா? என விசாரணை நடத்த, சிபிசிஐடி  போலீசார், எனக்கு சம்மன் அனுப்பினர். இதனால், நேரில் ஆஜராகி எனது விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக அளித்தேன். எனக்கு கட்சியில், மாநில செயல்தலைவராக பதவி உயர்வு  அளிக்கப்பட்டபோது, எனக்கு நிறைய பேர் நேரில் வந்து, சால்வை அணிவித்து  வாழ்த்து தெரிவித்தனர். அன்றையதினம் திருநாவுக்கரசுவும் அவரது தந்தையும்  வந்துள்ளார்கள். இது, எனக்கு தெரியாது. அவர்கள் வந்துவிட்டு சென்றபிறகுதான் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சி பொள்ளாச்சி பகுதி நிர்வாகி ராஜசேகர் தலைமையில் 30 பேர் எனக்கு வாழ்த்து தெரிவிக்க வந்துள்ளனர். அவர்களுடன், திருநாவுக்கரசும் கூட்டத்தோடு கூட்டமாக வந்துள்ளார். மற்றபடி, அவருக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.

இவ்வாறு மயூரா ஜெயக்குமார் கூறினார். இதுபற்றி பொள்ளாச்சி ராஜசேகர் கூறுகையில், ‘‘மயூரா ஜெயக்குமாரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க, பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்தோம். அந்த 30 பேரில், திருநாவுக்கரசும், அவரது தந்தையும் இருந்துள்ளனர். அவர்கள் யார், என்ன தொழில் செய்கிறார்கள் என எதுவும் எனக்கு தெரியாது’’’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: